ஷங்கர் இயக்கததில் நடித்த நண்பன் படத்தையடுத்து விஜய் நடித்துள்ள படம்
துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் இணையும் முதல் படம் என்பதால்
இப்படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், டைட்டில் பிரச்னை, ரிலீஸ் பிரச்னை என்று சிலபல சிக்கல்களில்
சிக்கியிருந்த அப்படம் நேற்று தீபாவளி தினத்தன்று வெளியானது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப படம் வந்திருப்பதால் இந்த தீபாவளியின்
சிறந்த படம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த நேரத்தில்,
படத்தில் சில காட்சிகளில் முஸ்லீம்களை தீவிரவாதிகள் போன்று
சித்தரித்திருக்கிறார்கள். அதனால் அந்த காட்சிகளை படத்திலிருந்தே நீக்க
வேண்டும் என்று இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர் போர்க்கொடி
பிடித்துள்ளனர்.
இதையடுத்து நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு கண்டனம்
தெரிவித்துள்ள அவர்கள் இன்று அவர்களின் வீடுகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ்
வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாலையில் விஜய் வீட்டு முன்பு இந்திய தேசிய லீக் கட்சியை
சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லி வலியுறுத்தியும்,
விஜய்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சிகளை
நீக்காவிட்டால் துப்பாக்கி படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
நடத்தப்போவதாகவும், மாநிலம் முழுவதும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த
இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.