இனவாதத்தை விதைக்கும் 'பொது பல சேனா' அமைப்பை தடைசெய்க!
இனவாதத்தை விதைக்கும் பொது பல சேனா அமைப்பை தடைசெய்ய வேண்டுமென நியூ
டவுண் மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 2ஆவது பொது
குழுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை
ரஹ்மத்துல்லாவின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஆர்.எம். ரியாஸ்,
செயலாளர் அப்துர் ராஸிக் உட்பட நாடளாவிய ரீதியில் இயங்கும் தவ்ஹீத்
அமைப்பின் 38 கிளை நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த பொதுக்குழுக் கூட்டத்தின் போது பொது பல சேனா, 13ஆவது சரத்து,
நாட்டில் இயங்கும் இஸ்லாத்திற்கு எதிரான இணையத்தளங்கள், பள்ளிவாசல் உடைப்பு
மற்றும் இன மத பால் அடிப்படையிலான பாடசாலைகளை இல்லாது ஒழிக்கும் திட்டம்
உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகளுடன் தொடர்புடைய முக்கிய
பிரச்சினைகளுக்கான தங்களது அமைப்பின் தீர்மானங்களை வெளியிட்டு வைத்தனர்
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட தீர்மானங்களாவன,
1.
இலங்கையில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு
நாட்டில் சுதந்திரமும், சுபீட்சமும் மலர்ந்திருக்கும் இக்கால கட்டத்தில்,
இனங்களுகிடையில் பிளவை உண்டாக்கும் விதமாக நாட்டின் பல பகுதிகளிலும்
கட்டவிழ்த்து விடப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும். இனங்களுக்கிடையில் பிளவை உண்டாக்கி இனக் கலவரத்தை தோற்றுவிக்கும்
விதமாக செயற்படும் ஷபொது பல சேனா| என்ற அமைப்பை அரசாங்கம் தடை செய்ய
வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கின்றது.
2. இஸ்லாத்தையும்,
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதமாக
கேலிச் சித்திரங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் போன்றவை
வெளியிடப்படுகின்றன. சுமார் 200 கோடி மக்கள் பின்பற்றும் ஒரு தூய
மனிதரையும், தூய்மையான மார்க்கத்தையும் அவமானப்படுத்த நினைப்பவர்கள் இது
போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு மதத்தை கேவலப்படுத்தி
அதை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்துபவர்களை அந்தந்த நாட்டு அரசுகள்
கடுமையாக தண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கின்றது.
3.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், குர்ஆனை தீவிரவாதத்தை போதிக்கும்
வேதமாகவும் சித்தரித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஷவிஸ்வரூபம்|
திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு தடை செய்யப்பட வேண்டும்.
ஷதிரைப்பட வெளியீட்டுக் கூட்டுத் தாபனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவை இது
தொடர்பாக கவனம் எடுத்து இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு
கேட்டுக்கொள்கின்றது.
4. ஜனநாயகம் மலர்ந்து, நாட்டு மக்கள்
அனைவரும் அமைதியாக வாழும் இக்கால கட்டத்தில் நாடு முழுவதும் பள்ளிவாசல்கள்
மற்றும் இஸ்லாமிய மதத் தளங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும், இனத்
துவேச செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இனத் துவேசத்தைத்
தூண்டும் யாராக இருந்தாலும் அரசு பாரபட்சமின்றி அவர்களை உடனடியாகத்
தண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
5.
சிறுவர்களுக்கு எதிரான ஷசிறுவர் துஷ்பிரயோகம்| மற்றும் பெண்களுக்கு எதிரான
பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவற்றை தடுப்பதற்கு அனைத்துத் தரப்பாரும்
முன்வர வேண்டும். சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான செயற்பாடுகள்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்த குற்றச் செயல்களில்
ஈடுபடுபவர்களை அரசாங்கம் கடுமையாக தண்டிப்பதுடன், பெண்களையும்,
சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாமிய சட்டவாக்கம் தான் சிறந்த
வழிகாட்டலாகும். ஆகவே, பெண்களை பாதுகாக்கும் விடயத்திலும், சிறுவர்
உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் இஸ்லாம் சொல்லும் வழி முறைகளை நடை
முறைக்குக் கொண்டுவர வேண்டும் என இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.
6.
இன, மத, பால் அடிப்படையில் இனிமேல் பாடசாலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாது
என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதே நேரம் இன, மத,
பால் அடிப்படையில் பாடசாலைகளை அமைப்பது பிரிவினையை உண்டாக்கும் என்று
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக்
கருத்துக்கள் ஏற்புடையதல்ல. முஸ்லிம்கள் தங்கள் கல்வியுரிமையை பெற்றுக்
கொள்ளவென பன்னெடுங் காலமாக போராடி தனிப் பாடசாலை உரிமையை பெற்றுக்
கொண்டுள்ளார்கள். இதை இல்லாதொழிப்பது என்பது சிறுபான்மை மக்களின் உரிமை
பறிப்பதற்கு சமமானதாகும். அதுமட்டுமல்லாமல் ஆண், பெண் கலவன் பாடசாலைகளை
உருவாக்குவது ஒழுக்கத்தையும், ஒழுக்க விழுமியங்களையும் இல்லாதொழிக்கும் ஒரு
செயற்பாடாகும். அதுமட்டுமன்றி ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் ஒவ்வொரு
கலாசாரம் இருக்கின்றது. ஆண், பெண் கலவன் பாடசாலைகள் மூலம் பல் சமூகத்தின்
கலாசாரங்களும் ஒன்றாகக் கலந்து கலாசார சீர் கேடுகள் உருவாகும். இன, மத,
பால் ரீதியிலான பாடசாலைகளுக்கு தடை விதிப்பது சிறுபான்மை மக்களின்
உரிமைகளைப் பறிப்பதாகும் என்பதனால் இன, மத, பால் ரீதியான பாடசாலைகளை
உருவாக்குவதை தவிர்த்து கலவன் பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து
ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்பதை இப்பொதுக்குழு
தெரிவித்துக்கொள்கின்றது.
7. அரசியல் யாப்பின் 13ஆவது சரத்தை
இல்லாதொழிக்க வேண்டும் என்று இனவாதம் பேசும் சிலர் கருத்து வெளியிட்டு
வருவதும் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றாக இருக்கின்றது. அரசியல்
யாப்பின் 13ஆவது சரத்து என்பது அதிகாரப் பரவல் முறையை அங்கீகரிப்பதாகவும்,
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும்
இருக்கிறது. அதனை இல்லாதொழிப்பதென்பது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கும்
மிகப் பெரும் துரோகமாகும் ஆகவே 13ஆவது சரத்தை இல்லாதொழிப்பதோ, மாற்றி
அமைப்பது என்பதோ தேவையற்ற ஒன்றாகும் என்று இப்பொதுக்குழு கருதி, 13வது
சரத்துக்கெதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை வன்மைகயாகக் கண்டிக்கின்றது.
8.
முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி இஸ்லாத்தின் தூய
கருத்துக்களை கேலியும், கிண்டலும் செய்து இலங்கையில் சுமார் 20க்கும்
மேற்பட்ட இணையத்தளங்கள் இயங்குகின்றன. இவையனைத்தையும் அரசாங்கம் தடை செய்ய
வேண்டும் என இப்பொதுக்குழு வேண்டிக் கொள்வதுடன், இப்படியான தீய செயலில்
ஈடுபடுபவர்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
9. யுத்தம்
முடிவுக்கு வந்து 43 மாதங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களின்
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் தான் இன்னும் அவர்கள்
இருக்கிறார்கள். ஆகவே அவர்களை அவசரமாக மீள் குடியேற்றம் செய்வதுடன்
அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு
வேண்டிக்கொள்கின்றது.
10. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய
வெள்ளப்பெருக்கு காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, வீடு
வாசல்களை இழந்து தவிக்கும் இத்தருணத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வெள்ள
நிவாரணப் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருக்கிறது. இதே போன்று இலங்கை
அரசும் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து
உதவிகளையும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு
வேண்டிக்கொள்கிறது.
11. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாடு முழுவதும்
பிரசாரம் செய்யும் ஒரே அமைப்பான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எதிர்
வரும் மார்ச் மாதத்தில் கிழக்கு மாகாணம் சம்மாந்துறையில் மாபெரும் கொள்கை
எழுச்சி மாநாட்டை சுமார் 2 இலட்சம் மக்களை ஒன்று திரட்டி நடத்துவதென்று
இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கின்றது.