எனக்காக வாடும் அன்பின் உடன் பிறப்புக்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
அல்லாஹ்வுடைய நாட்டப் படி நான் ஒரு
ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பலநூறு சமூக அநீதிகளுக்கு
ஆட்படும் என்போன்ற ஆயிரமாயிரம் சகோதரிகளில் ஒருத்தியாக நானும் அறியாப்
பருவத்தில் கடல் கடந்து பிழைப்புக்காய் புறப்பட்டு வந்தேன், எனது தந்தை
காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வந்து விற்று எங்களை வாழ்விக்க
நடாத்திய போராட்டம், பசியால் வாடும் தம்பி தங்கைகளின் அவலம் எங்களை எல்லாம்
படிப்பித்து ஆளாக்க வேண்டும் என்ற உம்மாவின் ஏக்கம் இவற்றிற்கெல்லாம் ஒரு
முடிவாக என்னையும் வெளி நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று நான் தான்
ஒற்றைக் காலில் நின்று வெளி நாடு வந்தேன்.
வயது குறைந்த என்னை ஏன் எப்படி யார்
வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்றெல்லாம் ஆராய்வதை விட எனது மரணம்
உரத்துச் சொல்லும் செய்தியை உள்வாங்கி இன்னும் பல நூறு ரிசானாக்கள்
உருவாகுவதை தடுத்து நிறுத்துங்கள். எனது தாய் த்னாதையறை நீங்கள் குறை
சொல்லாதீர்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள், அதேவேளை அவர்களைப் போல்
அநாதரவான நிலையில் உள்ள பல நூறு தாய் தந்தையர்களுக்கு நீங்கள் கை கொடுத்து
உதவுங்கள்.
முஸ்லிம் பெண்கள் மஹ்ரம் இல்லது
வெளிநாடு செல்லக் கூடாது என்று என் போன்ற சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்ய
பலநூறு அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள், அமைப்புக்கள் இருந்தன, அனால்
ஆண்கள் பெண்களை "கவ்வாமூன்" களாக இருந்து எவ்வாறு வாழ வைத்திருக்க
வேண்டும் என்று உரத்துச் சொல்லவும் அமுல் படுத்தவும் அவர்கள் முன்
வந்திருந்தால் பல திரைமறைவில் பல ஆயிரம் சமூக அநீதிகளுக்கு என்
போன்றவர்கள் அட்பட்டிருக்க மாட்டார்கள்.
மனித குலத்துக்கே கருணையின் வடிவமாக
வந்த ரஸூலுல்லாஹ் தூதை சுமந்து அதற்காக உழைக்கும் நல்லவர்கள் எம் போன்ற
ஏழைகளின் வாசலுக்கு கருணையின் தூதை சுமந்து வந்திருந்தால் தூது பிறந்த
மண்ணிலேயே நான் தூக்குக் கயிறை முத்தமிட்டிருப்பேனா! இஸ்லாத்தின் தூதை
பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தும் நல்லவர்கள் எங்கள் போன்ற ஏழை எளியவர்
வாசலுக்கு அதனை ஏன் முழுமையாக கொண்டு வரவில்லை.
எனக்காக கவலைப் படுபவர்களுக்கு எனது
விடுதலைக்காக உழைத்தவர்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இஸ்லாமிய ஷரீஅத்து
சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள் " என்றெல்லாம் கேட்டது எனது
காதுகளில் விழுந்த போது ஷரீஅத்து நீதிமன்றில் எனது பக்க நியாயங்களை
முவைத்து எனக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்த பாரிய நிதியுதவி தேவைப்பட்ட
போது ,அதற்கான சட்ட ஏற்பாடுகளும் ,நிதி ஒதுக்கீடுகளும் இல்லையென
தெரிவிக்கப் பட்டப் போது இந்த ஷரீஅத்தின் வழி காட்டல்கள் தெரிந்த சிலராவது
குரல் கொடுக்காமை என் போன்ற நாதியற்றவர்களின் துரதிஷ்டமே.
எனது உண்மையான வயதை நிரூபிக்கக் கூடிய
எந்த ஆவணமும் ஷரீஅத் நீதிமன்றம் முன் கடைசி நிமிடம் வரை எனது
கடவுச்சீட்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் போலியானவை என்பதை
நிரூபிக்கும் சட்ட வலுவுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை, அடிக்கடி
எனது பெயரால் சவாரி செய்தவர்களால் முன்வைக்கப் படவில்லையே, அந்நிய நாட்டில்
அபலைப் பெண் நான் ஆபத்தில் மாட்டியிருக்க எனக்காக கைகொடுக்க ஒரு முஹ்தசம்
பில்லாஹ் கூட இருக்க வில்லையேஇருந்திருந்தால் நீங்கள் சொல்லும் அதே ஷரீஅத்
சட்டப் படி நான் விடுதலை ஆயிருப்பேனே!
அரபு மொழி தெரியாத என்னை தமிழ் மொழி
நன்கு தெரியாத மலையாளி மொழிபெயர்ப்பாளர் பொலிசாரினதும் எஜமாட்டியினதும்
அடி உதைகளுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பொழுது, எனக்காக
வாதிட குரல் கொடுக்க நன்கு இஸ்லாமிய ஷரீஆ கற்ற ஒருசில நல்லவர்களாவது ஏன்
முன்வரவில்லை, ஏனென்றால் சுகயீன்முற்றிகும் வாப்பவிற்கும் வாடி துவண்டு
போயிருக்கும் உம்மாவுக்கும் ஷரீஅத் சட்டம் பேசுமளவு கல்வியோ, அல்லது
கற்றவர்களின் சேவைகளை காசு கொடுத்துப் பெரும் தகுதியோ செல்வாக்கோ இல்லாமை
தானே.?
எனக்காக வாதாட ஒரு சட்டத்தரணியை அமர்த்த
உங்களால் முடியாமல் போயிருக்கலாம் அதற்காக நான் கவலைப் படவில்லை அனால்
இந்த நிலை இனிவரும் காலங்களில் எவருக்கும் ஏற்படாதிருக்க கடல் கடந்து
உழைப்போருக்கான ஒரு சட்ட நிதியத்தையும், சட்ட உதவி பொறிமுறை ஒன்றையும்
இனியாவது என் போன்றவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுங்கள்.
இஸ்லாத்தின் நிழலில் பெண்கள் கண்களாக
மதிக்கப் படுகிறார்கள், அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும்
வழங்கப்படும் அந்தஸ்து இது தான், மகரம் இன்றி கடல் கடந்தென்ன கதவு கடந்தும்
செல்ல வேண்டிய நிலை ஏற்படமாட்டாது என்று உலகிற்கும் நாட்டிற்கும் பறை
சாற்றுங்கள், அன்றுதான் இஸ்லாமிய தூது முழுமை பெரும்,அழைப்புப்
பணி அர்த்தம் பெரும்.
நபிலான ஹஜ்ஜுக்காகவும் நபிலான
உம்ராவிற்காகவும் பல நூறு இலட்ச்சங்களை வருடா வருடம் செலவிடும் நமது
சமூகம் அதற்காக பல இலட்சங்களை அள்ளி வீசி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள்
உலமாக்கள் எங்கள் தம்பி தங்கையின் கல்விக்காக கை கொடுத்திருந்தால்
சிறுமி எனது கரத்தில் குழந்தையொன்று மூச்சுத் திணறி மரணிக்கும் நிலை
வந்திருக்குமா?
இன்று நாட்டில் நமது உடன் பிறப்புக்கள்
எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் எனது மையித்து செய்தி வந்து
சேருகிறது, சமுதாயம் உள்வீட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணாமல், எங்களை நாங்களே ஒழுங்கு படுத்திக் கொள்ளாமல் எவ்வாறு அடுத்த
சமூகங்களுக்கு முகம் கொடுப்பது, எனது வாழ்விலும் மரணத்திலும் எதாவது
படிப்பினைகள் இருந்தால் அவற்றை தலைமேல் கொண்டு என் போன்ற பலநூறு சிறுவர்
சிறுமியரது ,ஏழை எளியவரது வாழ்விற்கு வழி சொல்லுங்கள். அதுவே நான்
சொல்லும் செய்தி..!
இவ்வண்ணம்
உங்களை பிரிந்து செல்லும் சகோதரி
ரிஸானா நாபிக்