
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டதாக கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாகன உரிமையாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனைத் தவிர குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவமுள்ள சாரதிகளை மாத்திரம் பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்ககோனின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் ஒழுக்கமிகு ஆடைகளை அணிந்து சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இரத்மலானையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை சேவையில் உள்ள அனைத்து வேன் மற்றும் பஸ்களை நாளை முதல் பரிசோதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைகள் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாவட்ட வாகன பரிசோதகரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.