இணையத்தளங்களை பதிவு செய்யும் நடவடிக்கையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 41இணையத்தளங் களுக்கு அடுத்த வாரத்தில் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான தகைமைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 41 இணையத்தளங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பீ. கணேகல தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படுகின்ற இணையத்தளங்கள் பற்றிய தகவல்கள், அதன் உரிமையாளர்கள், அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊடகங்கள் ஊடாக வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்த 80 இணையத்தளங்களில் 61 இணையத்தளங்கள் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டன.
டிசெம்பர் மாதம் 23 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் கலந்து கொண்ட 61 இணையத்தளங்களில் 20 இணையத்தளங்கள் பதிவு செய்வதற்குரிய தகைமையற்றவையென்றும் அதன்படி 41 இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கணேகல சுட்டிக்காட்டியுள்ளார்.
நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய இணையத்தளங்களை உரிய முறையில் பரீட்சித்ததாகவும் எனவே அதன் போது உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்த இணையத்தளங்கள்இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான போலியான தகவல்களை வெளியிடுவதனைத் தவிர்த்து விட்டு வருமாறும் சில இணையத்தளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதற்கு காலஎல்லை இல்லை தகைமைகளை பரீட்சித்ததன் பின்னர் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.