பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்!


மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில், நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர், மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என, பலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால், சந்தேகப்பட்ட சிலர், அவரை நெருங்கினர்.



அப்போது அவர், மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப, “108′ ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், “காயம் இல்லாததால், அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது’ எனக்கூறி, திரும்பிச் சென்றனர்

பின், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்ததும், மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார், அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர்.

அதுவரை வாய் திறக்காதவர், பேசத் தொடங்கினார். “”எனக்கு உணவே வேண்டாம், தயவு செய்து என்னை விடுங்க…” என, அழுதார். “”மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.

எனக்கு ஒரு மகள், மகன் . சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து, திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன்.

ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை, யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால், அங்கிருந்து பஸ் ஏறினேன்.

15 நாட்களுக்கு முன், மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்து, உணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின், பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.

காதில் தங்கத்தோடு இருந்தாலும், அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால், உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,” என, அழ துவங்கினார்.

அவரை சமாதானப்படுத்திய போலீசார், கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now