பெறுமதிமிக்க காணி நிலங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்கள் என்பவற்றை அபகரித்துக் கொள்வதற்காக போலி உறுதிகள், ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்து மோசடி செய்யும் குழுக்களை ஒடுக்கி விடும் நடவடிக்கையொன்றை முன்னெடுப் பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
நாட்டில் இத்தகைய விசேட நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த சில மாத காலத்துக்குள் இவ்விதம் போலி உறுதிகள் மூலம் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டிருந்தன. இது குறித்து பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந்த நடவடிக்கைக்கு கோத்தபாய உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களை ஒழித்துவிடும் நடவடிக்கைக்கு சமமானதாக இந்தப் புதிய நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்போர் என்போரால் இந்த மோசடிச் செயற்பாடு நிகழ்த்தப்படுவதாக அடிப்படை விசாரணைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. கொடைவள்ளல் ஒருவரால் அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட கொழும்பு கறுவாத் தோட்டத்தில் அமைந்துள்ள பல கோடி ரூபா பெறுமதியான காணி மற்றும் வீடு என்பன இவ்விதம் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற ஏராளமான முறைப்பாடுகள் பாதுகாப்புப் பிரிவுக்குக் கிடைத்துள்ளன.
போலி உறுதிகள் மூலம் பிறரது காணிகளை அபகரித்து அவற்றை வங்கிகளில் அடமானம் வைத்து கோடிக் கணக்கில் கடன்களும் பெறப்பட்டுள்ளன. இதனால் முன்னணியில் உள்ள வங்களில் பலவும் பாரதூரமான சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன.
காணிப்பதிவு அலுவலகத்தின் சில உயரதிகாரிகள் மற்றும் சட்டத் தரணிகள் தரப்பொன்றும் இந்த மோசடிச் செயற்பாட்டில் இணைந்துள்ளதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரையும் கூண்டோடு பிடிக்க பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.


