வட மாகாணத்தில் காணப்படும்
தாதியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை
மற்றும் வர்த்தக பிரிவில் சித்தியடைந்தவர்களும் தாதியர் பயிற்சிக்கு
சேர்த்துக் கொள்ளப்படுவர் இந்த விசேட சலுகை வடபகுதிக்கு மட்டுமே என சுகாதார
அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில்
இன்று ஆரம்பமான இலங்கை மருத்துவ சங்கத்தின் பிராந்திய மாநாட்டில் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழில் எதிர்நோக்கும் மருத்துவ சவால்களும்
அதனை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளும் என்ற தலைப்பில் வடமாகாண சுகாதாரப்
பணிப்பாளர் டொக்டர் திருமதி ராகினி யூட்டின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை
மருத்தவ சங்க தலைவர் டொக்டர் வஜிர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இச்
செயலமர்வு நடைபெற்றது.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கடந்த 30 வருடங்களாக போரினால்
பாதிக்கப்பட்ட இப் பிரதேசத்தினை ஏனைய மாவட்டங்களைப் போன்று சகல வழிகளிலும்
கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம். இதனடிப்படையில்
இப் பிரதேசத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு
வருகின்றன.
அதே வேளை பெருமளவு வைத்தியசாலைகளும் பேரழிவுக்குள்ளாகியுள்ளன. அவற்றை மீளக்கட்டியெழுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு விசேட மருத்துவ அதிகாரிகள் மற்றும்
டாக்டர்கள் தாதியர் சுகாதார பரிசோதகர்கள் மருத்துவ உபகரணங்கள் அம்புலன்ஸ்
வண்டிகள் பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றைச் சீர்செய்வதற்கு ஜனாதிபதி பெருமளவில் நிதியொதுக்கி உள்ளார் எந்த விதமான பாகுபாடுகளும் இன்றி அவை அபிவிருத்தி செய்யப்படும்.
முன்பு விஞ்ஞான பாடங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
வடபகுதியில் இப்பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகள் இல்லாததினால் கலை மற்றும் வர்த்தக பாடங்களில் சித்தியடைந்தவர்களையும் இணைத்துக் கொண்டிருப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளேன் இந்த சலுகை வடபகுதிக்கு மட்டுமே. ஆனால் இதனை எதிர்த்து தாதியர் தொழிற் சங்கமே ஆர்ப்பாட்டம் செய்தது எந்த எதிர்ப்பு வந்தாலும் இத் திட்டம் கைவிடப்பட மாட்டாது.
வைத்தியர் பற்றாக்குறை தொடர்பாக கூறிய
அமைச்சர் அது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. உலக நாடுகளில் நம் நாட்டு
டாக்டர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இப் பிரதேசத்தில்
உருவான டாக்டர்களில் வெளிநாடுகளில் நல்ல பல பதவிகளில் இருக்கின்றார்.
இப் பிரதேசங்களில் இருந்து டாக்டர்களாக
வெளிவருபவர்கள் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களாவது தமது மக்களுக்கு சேவை
செய்ய முன் வருவார்களேயானால் யாழ். மாவட்டத்தில் வைத்தியர் பற்றாக்குறை
எப்போதும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
|

