ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் பரிதாபமாகத் தோற்ற இந்தியா 0-2 என பிந்தங்கியுள்ளது. இந்த நிலையில், 3வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் 13ம் தேதி தொடங்குகிறது.
பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரன் குவிக்கத் தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் டோனி மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ள நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் பயிற்சி செய்யாமல் பொழுதுபோக்கில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
வலைப் பயிற்சியில் ஈடுபடாமல், கோ&கார்ட்டிங் மையத்துக்கு சென்று எலக்ட்ரிக் கார் ஓட்டி பொழுதைக் கழித்த வீரர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம் இந்திய வீரர்களிடம் சுத்தமாக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறியுள்ளார்.
இஷாந்த் ஆத்திரம்: சிட்னி டெஸ்ட் போட்டியின்போது கிண்டல் செய்த ரசிகர்களை நோக்கி இந்திய வீரர் விராத் கோஹ்லி நடுவிரலை நீட்டி ஆபாசமாக சைகை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட கோஹ்லிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோ&கார்ட்டிங் மையத்துக்கு சென்ற இந்திய வீரர்களை ரசிகர்களும் செய்தியாளர்களும் முற்றுகையிட்டனர்.
தாங்கள் கார் ஓட்டுவதை ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததால் ஆத்திரம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, அவர்களை நோக்கி விரலை நீட்டி ஆபாச சைகை செய்ததாக தகவல் வெளியானதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், இது போன்ற சம்பவம் நடந்ததாக தனக்கு எந்த தகவலும் இல்லை என்று இந்திய அணி மீடியா மேலாளர் ஜி.எஸ்.வாலியா கூறியுள்ளார்.