இருதய நோய்க்கு உட்கொள்ளப்படும் ஐசோபேட்
மொனட்ரேட் (Isosorbide Mononitrate) 20 மில்லிகிராம் என்ற மருந்தை
தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும் யாழ்.
போதனா வைத்தியசாலையில் பாவனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இம்மருந்தை உட்கொண்ட
அந்நாட்டவர்கள் 70 பேர் பலியாகியிருந்ததோடு, 100 ற்கும் அதிகமானவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே பாகிஸ்தானிலுள்ள
நிறுவனம் ஒன்றினுடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுவருகின்ற ஐசோபேட்
மொனட்ரேட் 20 மில்லிகிராம் என்கின்ற மருந்துப் பாவனையை இடைநிறுத்த
தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
அதற்கமைய, அரச மருத்துவனைகள், அரச மருந்தக
கூட்டுதாபனம், தனியார் வைத்தியசாலைகள் ஆகியவற்றில் மீள் அறிவித்தல் வரை
இந்த மருந்தை உபயோகிக்க வேண்டாம் எனவும் அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.
இருந்தபோதிலும், குறித்த மருந்துப்பாவனை
தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த
மருந்தை இறக்குமதி செய்கின்ற பாகிஸ்தானிலுள்ள நிறுவனத்தை
இடைநிறுத்தியுள்ளதாக அறியக்கிடைத்த போதிலும் ஐசோபேட் மொனட்ரேட் 20
மில்லிகிராம் மருந்தை வைத்தியசாலையில் பாவிக்க வேண்டாம் என உத்தியோகபூர்வ
அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன