ஊடக சங்கம் மற்றும் சுயாதீன இயக்கங்கள் சிலவற்றால் இன்று (25) மாலை கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்ப்பு ஆர்பாட்டம் வீதிப் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாதென கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸார் முன்வைத்த முறைப்பாடு ஒன்றை இன்று (25) பரிசீலித்த நீதவான் கனிஸ்க விஜேரத்ன, இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும் ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மாத்திரம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியும் எனவும் ஜனாதிபதி மாளிகைக்கோ, ஜனாதிபதி அலுவலகத்திற்கோ வீதிப் போக்குவரத்து தடையை ஏற்படுத்தும் வகையில் பேரணி செல்ல முடியாது எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்ப்பை ஆரம்பித்து ஜனாதிபதி மாளிகை அல்லது ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படி செய்தால் அதன் மூலம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் அரங்கேற்றப்பட்டு வரும் ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஜனவரி என்ற பெயரில் ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு இன்று மாலை புறக்கோட்டையில் ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.