அடிலைட்டில் இன்று நிறைவடைந்த நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 298 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
500 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாம் இன்னிங்ஸில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இறுதி நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்திய அணிசார்பாக இரண்டாம் இன்னிங்ஸில் விரேந்தர் சேவாக் 62 ஓட்டங்களைப் பெற்றதுடன், வி.வி.எஸ் லக்ஷமன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய அணிசார்பாக இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் நெதன் லியோன் நான்கு விக்கெட்டை கைப்பற்றியதுடன், ரெயான் ஹரிஸ் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்களைப் பெற்றதுடன், அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டகாரராக பீற்றர் சிடில் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை, தொடரின் சிறப்பாட்டகாரராக அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவானார்.