மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் குரங்குகள் பிறந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ரீஸஸ் வகைக் குரங்குகள் ஆறின் கருக்களில் இருந்து உயிரணுக்களை ஒன்றாகச் சேர்த்து மரபணு கலப்பு செய்யப்பட்ட மூன்று குரங்குகளை உருவாக்கியுள்ளதாக ஒரெகான் மாகாணத்தைச் செர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண் குரங்குகள் மூன்றும் அரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளில் குரங்கைப் பயன்படுத்தும் விஷயத்தில் ஒரு படி முன்னேற்றத்தை தங்களின் இந்த முயற்சி குறிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹெக்ஸ், ரோகூ, கைமெரோ என்று இந்த மூன்று குரங்குகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மரங்களிலும் மலைகளிலும் அதிகம் காணப்படும் ரீஸஸ் வகை குரங்குகளில் பலவற்றின் கருக்களை எடுத்து வெவ்வேறு குரங்குகளில் இருந்து பெறப்பட்ட வெவ்வேறு மரபணுக்களை ஒன்றாக ஒட்டி புதிய கருவை உருவாக்கி, பின்னர் அதனை அவற்றை பெண் குரங்குகளின் கர்ப்பப்பையில் வெற்றிகரமாக வைத்தன் பின்னர் இந்தக் குரங்குகள் பிறந்துள்ளன.
உயிரணுக் கலப்பால் உருவான இந்தக் குரங்குகளை கைமெராக்கள் என்று ஒரெகானில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கருக்களின் வளர்ச்சியில் வெவ்வேறு மரபணுக்களின் பங்கு என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள இந்த மரபணு மாற்றப்பட்ட குரங்குகள் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஹெச்.ஐ.வி. மற்றும் இதர நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் நமது ஆராய்ச்சிகளிலும் இவை பயன்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் உயிர்களை வைத்து ஆராய்ச்சி செய்யப்படுவதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் ஆர்வலர்கள், இவ்வகையில் மரபணுக் கலப்பு செய்து மிருகங்கள் உருவாக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
இவற்றை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தினால், அது பலவிதமான தார்மீகக் கெள்விகளையும், விலங்குகள் சித்ரவதை தொடர்பான கேள்விகளையும் எழுப்பும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.