தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ-டியூபில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்கின்றன.
அவற்றின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ காட்சி யூ-டியூபில் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவிலும் ஆப்கன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக, கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக கடிதத்தில் கவுன்சில் கூறியுள்ளது.
இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறியதாவது: காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியான காட்சி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். வீடியோ காட்சி மற்றும் அதில் ஈடுபட்டதாக கூறப்படும் அமெரிக்க வீரர்கள் தொடர்பாக அமெரிக்க கடற்படையின் கிரிமினல் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.