ஐந்து
ரூபா பணம் மேலதிக கட்டணமாக வசூலித்தமையால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக
ஓடும் பஸ்ஸிலிருந்து பயணியொருவர் நடத்துநரால் வீதியில் தள்ளப்பட்டு இறந்த
சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
இடம்பெற்றுள்ளது.
சுபம் சிங் என்ற 21 வயது இளைஞனே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞன் சாட்னாவிலிருந்து ராம்புருக்குச் செல்வதற்காக குறித்த
பஸ்ஸில் பயணித்துள்ளார். இதன்போது பஸ் கட்டணமாக 20 ரூபா கட்டணத்திற்குப்
பதிலாக 25 ரூபாவை நடத்துநர் அறவிட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையில் எழுந்த வாய்த்தர்க்கத்தில் பஸ் நடத்துனர்
குறித்த இளைஞனை பஸ்ஸிலிருந்து தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்
அந்த இளைஞனின் தலை தரையில் அடிப்பட்டு இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து
ஏனைய பயணிகள் பொலிஸாருக்கு தகவல் அறிவித்தனர்.
'நாம் மேற்படி இளைஞனின் உறவினர்களிடமிருந்தும் முறைப்பாட்டை பெற்று பதிவு
செய்துள்ளோம். மேற்படி பஸ் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியும் கைது
செய்யப்பட்டுள்ளதாக குல்க்வா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.டி. பாண்டி
தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் மேற்படி பஸ்ஸின் நடத்துனர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.