இவ்வருடம்
ஜனவரி முத லாம் திகதி முதல் பெப்ர வரி 21 ஆம் திகதி வரையான காலப்
பகுதிக்குள் மாத்திரம் 86 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனரென
வெளிவிவகார அமைச்சின் கொன்சுயுலர் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர்
தெரிவித்தார்.வழமையிலும் பார்க்க இவ்வருடம் முதல் இரண்டு மாதங் கள்
முடிவுறுவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் மரணவீதம்
பாரிய அதிகரிப்பை எட்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரணமாக வருடத்திற்கு 60 தொடக்கம் 65
வரையான இலங்கையர்களே வெளிநாடுகளில் உயிரிழப்பது வழமை. இதற்கு முன்னர்
குறுகிய காலப் பகுதிக்குள் ஆகக்கூடியது சுமார் 25 வரையிலான இலங்கையர்கள்
வெவ்வேறு நாடுகளில் உயிரிழந்திருந்தனர். அந்தவகையில் கடந்த 52
நாட்களுக்குள் 86 இலங்கையர்களின் மரண வீதம் பாரிய அதிகரிப்பைக்
காட்டுவதாகவும் அவர் கூறினார்.
கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்கள்
அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களே அதிகளவில்
உயிரிழந்துள்ளனர். இவர்கள் விபத்து, சுகயீனம் மற்றும் தற்கொலை ஆகிய
காரணங்களினாலேயே கூடுதலாக மரணமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களை விட அதிகளவிலான ஆண்களே
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயிரிழந்துள்ளனர். வெளிநாடுகளில் இதுவரை
உயிரிழந்திருக்கும் 86 இலங்கையர்களினும் சுமார் 16 பேர் வரையிலானோரது
சடலங்கள் அந்தந்த நாடுகளிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் பல சடலங்கள்
இலங்கையிலுள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இன்னமும் 26 பேரினது சடலங்களை
இலங்கைக்கு எடுத்து வருவதற்காக வெளிவிவகார அமைச்சு குறித்த நாடுகளின்
தூதரகங்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் மரண விசாரணைகள் முடிவடையும்
வரையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
இவ்வருடம் முதல் 52 நாட்களுக்குள்
சவுதியில் 34 பேரும், குவைத்தில் 11 பேரும், ரோமில் 11 பேரும், டோஹா
கட்டாரில் ஆறு பேரும், துபாயில் ஐவரும், லெபனானில் நால்வரும், ஜோர்டானில்
இருவரும், மஸ்கட்டில் நால்வரும், பேங்கொக்கில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனைத்தவிர அபுதாபி, கோலாலம்பூர், லண்டன், ஹொங்கொங், அவுஸ்திரேலியா மற்றும்
இந்தியா ஆகிய நாடுகளிலும் தலா ஒருவர் வீதம் அறுவர் உயிரிழந்திருப்பதாகவும்
அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

