பட்டாணி ராசிக் கொலை விசாரணை தாமதத்தின் பின்னணியில் அமைச்சர் றிசாட் பதியுதீன்!




மனித உரிமை ஆர்வலரும் புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான பட்டாணி ராசிக்கின் கொலை விசாரணை தாமதத்தின் பின்னணியில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சருமான றிசாட் பதியுதீன் செயற்படுவதாக புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குற்றஞ்சாட்டியது.

பட்டாணி ராசிக்கின் கொலை தொடர்பில் புத்தளத்தில் வசித்த முகம்மட் நௌஷாட் மற்றும் காவத்தமுனையை சேர்ந்த எம்.ஐ.எம்.முஸ்தீன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மந்த கதியிலேயே மேற்கொள்வதாகவும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கூறியது.

இதனால் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தெரிவித்தது. பட்டாணி ராசிக் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவற்கான ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் பட்டாணி ராசிக்கின் குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட ஜம்இயதுல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிகையாளர் சபை தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிகையாளர் சபை செயலாளர் இஸட். ஏ.எம். றஸ்மி, பட்டாணி ராசிக்கின் புதல்வர் ஆர்.எம்.றிஸ்கான் மற்றும் பட்டாணி ராசிக்கின் குடும்ப சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிகையாளர் சபை தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில் மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிகையாளர் சபை செயலாளர் இஸட். ஏ.எம். றஸ்மி,”பட்டாணி ராசிக் கடத்தப்பட்டத்தை அடுத்து அவரின் குடும்பத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க பட்டாணி ராசிக்கை தேடும் பணியில் ஈடுபட்டது.
இதனையடுத்து பிரதான சந்தேகநபரான அமைச்சர் றிசாட் பதியுதீன் நெருங்கிய ஆதரவாளரான புத்தளத்தில் வசிக்கும் நௌஷாடை கைது செய்யப்படுவது தொடர்பில் அமைச்சருடன் பேச்சு நடத்தினோம்.

பல ஏமாற்றுகளுக்கு பின்னரே அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். நௌஷாட்டை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடுவதாக உறுதிமொழி வழங்கிய அவர், அதனை மேற்கொள்ளாமல் ஏமாற்றினார்.பிரதான சந்தேக நபரான நௌசாத் தன்னை கைது செய்தால் அமைச்சர் றிசாட்டின் அரசியல் செயற்பாடுகளுக்கு கலங்கம் ஏற்படும் என புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரியிருந்தார்.

இவ்வாறான நிலையில் பட்டாணி ராசிக்கின் கொலையின் பிண்ணியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் செயற்படுவது தெட்டத்தெளிவாக உள்ளது.வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு ரன்முத்து ஹோட்டேலில் இடம்பெற்ற நிகழ்வில் நௌசாத்தும் கலந்துகொண்டிருந்தார். இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த போதும் அவர்கள் கைது செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை” என்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த பட்டாணி ராசிக்கின் புதல்வர் ஆர்.எம்.றிஸ்கான், “கொல்லப்பட்ட எனது வாப்பாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரின் ஊடாக எனது இரத்தை கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி வழங்கினேன்.
ஆனால் கடந்த ஆறு மாத காலமாகின்ற நிலையில் இதுவரை மரபணு சோதனை அறிக்கை இன்னும் பொலநறுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக மரண சான்றிதழை பெற முடியாதுள்ளது. இதனால் ஓய்வுபெற்ற கிராம சேவகரான எனது தந்தையின் ஓய்வூதியத்தை பெற முடியாமல் எனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகின்றது.
அத்துடன் என்னால் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை.

பட்டாணி ராசிக்கின் கொலை தொடர்பில் புத்தளத்தில் வசித்த முகம்மட் நௌஷாட் மற்றும் காவத்தமுனையை சேர்ந்த எம்.ஐ.எம்.முஸ்தீன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மந்த கதியிலேயே மேற்கொள்கின்றனர்.

அவ்வாறில்லாமல் சீராக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டிருந்தால் எனது குடும்பத்தினர், ஐக்கிய நாடுகள் உலக உணவு திட்டத்தின் ஊழியாரான எம்.நிஃமத் உள்ளிட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களை விசாரணைக்குட்படுத்தியிருப்பர். ஆனால் அவையொன்றும் இடம்பெறவில்லை.

முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமையினாலேயே சந்தேகநபர்களான நௌஷாட் மற்றும் முஸ்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணைகளை முன்னர் மேல் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். தற்போது, இந்த விசாரணைகள் மேல் மட்டத்தினால் மேற்கொள்ளப்படுவதானலேயே அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது.

அரசியல் அழுத்தங்களை பிரயோகித்து இந்த கொலை தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர்” என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த பட்டாணி ராசிக்கின் குடும்ப சட்டத்தரணி லக்ஷான் டயஸ்,”மரபணு பரிசோதனை சமர்ப்பிக்கப்படாமல் இந்த கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான நெஷாட் பிணையில் கடந்த நவம்பர் 3ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவரை பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் மற்றும் அரச சட்டத்தரணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மரபணு பரிசோதனை சமர்ப்பிக்கப்படாமல் இந்த குற்றவாளியினை விடுதலை செய்ய முடியாது.ஆனால் இலங்கையின் வரலாற்றில் அரசியல் அழுத்தமின்றி மரபணு பரிசோதனை சமர்ப்பிக்கப்படாமாதல் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.அது போன்றே நௌசாத்தின் விடுதலையையும் கருத வேண்டியுள்ளது. இதனால் இந்த விசாரணைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசியல் சக்திகள் பின்னணியில் செயற்படுவது தெளிவாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது முஸ்தீனுக்கான பிணையும் கோரப்படவுள்ளது”  என்றார்.

இதேவேளை, பட்டாணி ராசிக்கின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு சில நாட்களின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பட்டானி பட்டானி ராசிக் கொலையுடன் தனக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுவேன் என அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறியமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்  மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் 162ஆம் பக்கம் 5.31 மற்றும் 5.32 ஆவது பந்திகளில் பட்டாணி ராசிக் கடத்தப்பட்டமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த கடத்தலின் பிண்ணயின் அரசியல் சக்தி செயற்படுவதுடன் பொலிஸார் முறையான விசாரணைகளை மேறகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now