ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்டியன் வூல்வ் அப்பதவியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை ராஜினாமாச் செய்துள்ளார்.
அவர் 2008 ஆம் ஆண்டு ஜேர்மனியின் லோவர் சக்ஸோனி மாநில பிரதமராக பதவி
வகித்தபோது செல்வந்த வர்த்தகரான இகோன் ஜேம்ஸ்கீர்கன்ஸ் என்பவரின்
மனைவியிடமிருந்து குறைந்த வட்டியிலான வீட்டுக்கடன் ஒன்றை பெற்றமை தொடர்பான
சர்ச்சையே இதற்குக் காரணம்.
இந்த வர்த்தகருடன் கிறிஸ்டியன் வூல்புக்கு ஏதேனும் வர்த்தகத் தொடர்புகள்
உள்ளனவா என லோவர் சக்ஸோனி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அவ்வர்த்தகருடன் தொடர்புகள் எதுவும் இல்லையென வூல்ப் மறுத்தார்.
வர்த்தகரின் மனைவியுடனான வர்த்தக தொடர்புகள் குறித்து அவர் பேசவில்லை.
2010 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் கிறிஸ்டியன்
வூல்புக்கான சட்ட விதிவிலக்கை நீக்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள்
வலியுறுத்தியதையடுத்து அவர் இன்று வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
ஜேர்மனியில் ஜனாதிபதி பதவி பொதுவாக அலங்காரப் பதவியொன்றாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.