ஸ்பொட்
பிக்ஸிங் எனும் சதி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட்
வீரர் ஒருவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை 4 மாத சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
எசெக்ஸ் பிராந்திய அணியைச் சேர்ந்த 23 வயதான மேர்வின் வெஸ்ட்பீல்ட், 2009
ஆம் ஆண்டு நடைபெற்ற தர்ஹாம் அணிக்கெதிரான போட்டியில் வீசும் முதல் ஓவரில்
குறிப்பிட்ட ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதற்காக 6000 ஸ்ரேலிங் பவுண்களைப்
பெற்றதாக ஒப்புக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கின்போது மேற்படி குற்றச்சாட்டை அவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து மேர்வின் வெஸ்ட்பீல்ட்டுக்கு 4 மாத சிறைத்தண்டனை விதித்து நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து வித போட்டிகளிலும்
வெஸ்ட்பீல்ட் பங்குபற்றத் தடை விதிக்கப்படுவதாக இங்கிலாந்து –வேல்ஸ்
கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியது.
மேற்படி போட்டியில் தான் வீசும் முதல் ஓவரில் 12 ஓட்டங்களை
விட்டுக்கொடுப்பதற்கு மேர்வின் வெஸ்ட்பீல்ட் இணங்கினார். எனினும் தர்ஹாம்
அணி 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற போதிலும் வெஸ்ட்பீல்டுக்கு
பேரம்பேசப்பட்ட பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆட்ட நிர்ணய சதியில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட முதலாவது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மேர்வின் வெஸ்ட்பீல்ட் ஆவார்.