சுழற்சிமுறையில்
மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்த இந்திய கிரிக்கட் அணித்தலைவர் தோனியின்
முடிவுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் ஆதரவு
தெரிவித்துள்ளார்.
ரோஹித்
சர்மாவுக்கு வாய்ப்பளிப்பதற்காக மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக்,
காம்பீருக்கு சுழற்சிமுறையில் ஓய்வளித்ததோடு, அவர்கள் சரியாக களத்தடுப்பு
செய்வதில்லை என்ற தோனியின் குற்றச்சாட்டால் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஷேவாக், காம்பீர் ஆகியோர் தோனி மீது கடுமையாகச் சாடியுள்ளனர்.
இந்நிலையில்
தோனியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அக்ரம் மேலும் கூறியிருப்பது:
தோனி மிகச்சிறந்த புத்திசாலித்தனமான வீரர் என்பதே என்னுடைய கருத்து. மூத்த
வீரர்கள் குறித்து தோனி கூறிய கருத்துகளின் பின்னணியில் சரியான காரணம்
இருக்கும்.
இதற்கு
முன்னர் தோனி இதுபோன்ற கருத்துகளைக் கூறியதாக, நான் கேட்டதில்லை. மூத்த
வீரர்கள் தோனியின் கட்டுப்பாட்டை மீறியிருக்கலாம் அல்லது சுமையாக
இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சச்சினின் உடற்தகுதி யாரும்
கேள்வியெழுப்ப முடியாது என்றார்.
இந்திய
அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் அணித்தேர்வு முடிவு குறித்து
கேள்வியெழுப்பிய அவர், நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் சிறந்த
துடுப்பாட்ட வீரர்களை தொடக்க வீரர்களாக களமிறக்கியிருப்பேன்.
கெளதம்
காம்பீர் இரண்டு ஆட்டங்களில் 90 ஓட்டங்களுக்கு மேல் குவித்தார். அவர்
இப்போதைய சிறந்த தொடக்க ஆட்டக்காரர். யாரை தொடக்க வீரர்களாக களமிறக்குவது
என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யவேண்டும். அதேபோல் வலது மற்றும் இடது கை
துடுப்பாட்ட வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்க வேண்டும்.
இலங்கைக்கு
எதிரான கடந்த ஆட்டத்தில் பார்மில் இல்லாத சச்சினும், சேவாக்கும் தொடக்க
வீரர்களாக களமிறங்கினார்கள். சிறப்பாக ஆடி வரும் காம்பீர் 3-வது வீரராகவே
களமிறக்கப்பட்டார்.
எனவே அணித்தேர்வில் பயிற்சியாளரால் முடிவெடுக்க முடியாத போது அவரை வைத்திருந்து என்ன பயன் என்று அக்ரம் கேள்வியெழுப்பினார்.