குடாநாட்டில்
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல்
கிடுகிடுவென உயர்வடைந்துள்ளன. சில பொருள்களின் விலைகள் 5 ரூபாவுக்கு
மேற்பட்ட தொகையினால் அதிகரித்திருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிபொருள்களின்
விலைகள் அதிகரிக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவற்றின் விலைகளை
இரண்டு இயக்க எண்ணிக்கையில் அதிகரித்தது அரசு.
இந்த எரிபொருள் விலையேற்றம்
அத்தியாவசியப் பொருள்களின் விலைகளிலும் அதிக தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
இதனால் நேற்றுமுன்தினம் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கிடுகிடுவென
உயர்த்தப்பட்டன.
நேற்றுக் காலை வர்த்தக நிலையங்களுக்குச்
சென்ற நுகர்வோருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலபொருள்களின் விலை
உயர்த்தப்பட்டதுடன் மேலும் சில பொருள்கள் தட்டுப்பாடாகவும் இருந்தன.
சீனியின் விலை நேற்றுமுதல் குடாநாட்டில்
5 ரூபாவால் உயர்த்தப்பட்டிருந்தது. யாழ். நகரப்பகுதி வர்த்தக நிலையங்களில்
நேற்று இந்த விலை அதிகரிப்பை உணர முடிந்தது. முன்னர் ஒரு கிலோ 83 ரூபாவாக
விற்கப்பட்ட சீனி நேற்றுமுதல் 5 ரூபா அதிகரித்து 88 ரூபாவாக உயர்ந்தது.
கொழும்பிலும் சீனியின் விலை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று ஏனைய அத்தியாவசியப்
பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக கோதுமை மாவு,
மைசூர் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி, செத்தல் மிளகாய், மல்லி, இஞ்சி,
உள்ளி, தேங்காய் எண்ணெய், மஞ்சள், சீரகம், சோயா ஆகியவற்றின் விலைகளையும்
சில தினங்களில் உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்.
வர்த்தகர்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தனர்.
இந்தப் பொருள்கள் பெரும்பாலும்
கொழும்பில் இருந்தே எடுத்துவரப்படுகின்றன. பாரஊர்திகளே இதற்கெனப்
பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும்
எரிபொருளான டீசல் லீற்றர் ஒன்றுக்கு 35 ரூபாவால் விலை
அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் நாம்
அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது எனவும் வர்த்தகர்கள்
கூறினார்கள்.சில வர்த்தக நிலையங்களில் அத்தியாவசியப் பொருள்கள் முடிவடைந்து
விட்டதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை :
நேற்று பொருள்களை வாங்குவதற்கு வர்த்தக
நிலையங்களுக்குச் சென்ற நுகர்வோர் ஒரு பக்கம், எரிபொருள் விலை உயர்வு
மறுபக்கம் பொருள்களின் விலை உயர்வு. எல்லாம் எங்கள் தலைகளில்தான் எனவும்
விசனப்பட்டுக் கொண்டனர்.
|