2007ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தி
செல்லப்பட்டு அவர்களின் நிர்வாகப் பிரிவில் பலவந்தமாக
பணிக்கமர்த்தப்பட்டிருந்த யுவதி ஒருவருக்கு அம்பாந்தோட்டை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி
அதிகார சபையில் வேலை வாய்ப்பு வழங்ககப்பட்டுள்ளது. சிறிதரன் சுகிர்தா (24
வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின்
போது நியமனக்கடிதத்தை நாமல் ராஜபக்ஷ எம்.பி வழங்கினார்.
க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் இரண்டாவது தடவையாக
தோற்றுவதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இருந்து வருகை தந்த தம்மை
எல்.ரி.ரி.ஈ.யினர் பலவந்தவமாக அழைத்துச் சென்றதோடு தன்னோடு கல்வி கற்ற
மேலும் 40 மாணவிகளையும் எல்.ரி.ரி.ஈயினர் பிடித்துச் சென்றதாக அவர்
தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதி கிடைத்து பெற்றோருக்கு உதவிக்கரமாக இருக்க
வேண்டுமென்ற எனது கனவு தவிடுபொடியாகியது என அவர் தெரிவித்தார். தந்தை
சிறிதரன், தாய் ரதிதேவி, அண்ணன் சுகிர்தன் மற்றும் தனது இரு சகோதரிகளான
சுகிர்தனி, சுகந்தினி ஆகியோர் குடும்பத்தில் உள்ளனர். குடும்பத்தில்
இரண்டாவதாக பிறந்த சுகிர்தா, அம்பாறை மாவட்டம் திருக்கோவிலிலுள்ள
விநாயகர்புரத்தில் தற்போது வாழ்ந்து வருகிறார். நியமனக் கடிதம்
பெற்றுக்கொள்ள வந்த இவர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் மகிழ்ச்சியாக
உரையாடினார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்;
தனது தந்தையும், அண்ணாவும் புலிகளின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றினர்.
நான் எவ்வித அச்சமும் இன்றி படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் என்னைப்
பலவந்தமாக பிடித்துச் சென்னர். இது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத
வேதனையாக இருந்தது. எனது தந்தையையும், அண்ணனையும் புலிகள் ஏற்கனவே
பலவந்தமாக பிடித்துச் சென்ற போதும் என்னையும் அவர்கள் பிடித்து செல்வார்கள்
என்று ஒருபோது நினைக்கவில்லை.
எல்.ரி.ரி.ஈ.யினர் ஒரு குடும்பத்தில் நால்வர் இருந்தால் மூவர்
எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் கட்டாயமாக இணைந்து கொள்ள வேண்டும் என்ற
நிபந்தனையின் அடிப்படையிலேயே என்னையும் அழைத்துச் சென்றனர்.
இவ்விதம் என்னை அழைத்துச் சென்ற எல்.ரி.ரி.ஈ. அமைப்பினர் அவர்களின்
நிர்வாக சேவையில் பணிக்கு அமர்த்தினர். எனினும் நான் எவ்வித ஆயுத
பயிற்சியோ, இராணுவத்தினருக்கு எதிராக ஆயுதப் போராட்டமோ செய்யவில்லை. என்னை
அவர்கள் அழைத்துச் சென்றது முதல் தனது குடும்பம் பொருளாதார ரீதியில் பாரிய
இன்னல்களுக்கு முகம் கொடுத்தது.
இந்நிலையில் எனது தயாரும் இரு சகோதரிகளும் தனிமையிலேயே வாழ்ந்து
வந்தனர். அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யினர் தந்தைக்கு வழங்கிய 8000 ரூபா மாதந்த
சம்பளத்தை கொண்டே சீவியம் நடத்தினார்கள். எனது அண்ணாவும் எல்.ரி.ரி.ஈ.
அமைப்பின் பொலிஸ் பிரிவில் சேவையாற்றினார். அவருக்கு எல்.ரி.ரி.ஈ.
அமைப்பினால் எவ்வித கொடுப்பனவும் வழங்கவில்லை.
இவ்வாறு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட நான் பாரிய அசெளகரியங்களுக்கு
முகம் கொடுக்க நேரிட்டது. பெற்றோரை பார்க்க முடியாது, எல்.ரி.ரி.ஈ.யின்
கட்டுபாட்டு பிரதேசத்தை விட்டு வெளியில் வர முடியாது, தெரிந்தவர்கள்
மற்றும் குடும்ப உறவினர்களை பார்வையிட கூட முடியாத சூழ்நிலையிலேயே நான்
இருந்தேன்.
என்னுடன் அமைப்பில் 2000 இற்கும் மேற்பட்ட பெண் எல்.ரி.ரி.ஈ.
உறுப்பினர்கள் இருந்தனர். எம்மை அவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து
பொறுப்புகளை ஒப்படைத்தனர். நாம் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு
வழங்கப்படும் உணவு, உடை மற்றும் இதர சேவைகள் தொடர்பில் பணியாற்றினோம்.
இவ்வாறான நிலையில் 2009ம் ஆண்டு தை மாதம் தான் எல்.ரி.ரி.ஈ.யினரின் ஷெல்
தாக்குதலில் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டேன். அவ்வேளையில் நான் எனது தந்தையின் உதவியுடன்
முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் ஊடாக தப்பி வந்தேன்.
அவ்வாறு தப்பி வந்த காரணத்தினால் மீண்டும் எல்.ரி.ரி.ஈ. எங்களை
பிடித்துக் கொள்வார்கள் என்று அஞ்சி நான்கு மாதங்கள் பங்கரினுள் மறைந்து
வாழ்ந்து வந்தேன்.
இந்நிலையில் இலங்கை இராணுவம் பொதுமக்களை மனிதாபிமான அடிப்படையில்
மீட்டுக் கொண்டிருந்த போது நானும் எனது குடும்பம் சகிதம் இராணுவத்தினரிடம்
சரணடைந்தோம். எனினும் நான் முன்னாள் புலி உறுப்பினர் என்பதால் வவுனியா
பம்பமடு புனவர்வாழ்வு நிலையத்திலும் தாய் மற்றும் எனது இரு சகோதரிகளும்
முகாமிலும் தஞ்சமடைந்தோம்.
புனர்வாழ்வு முகாமிலிருந்தே நான் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு
தோற்றினேன். இதன் காரணமாக எனக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கணனிப்
பயிற்சிகள் உட்பட தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்களை 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி
புனர்வாழ்வு நிலையத்தில் சந்தித்த போது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான
விடயத்தையும் கூறினார்.
நீங்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய
வேண்டும். அவ்வாறு ஏதேனும் தடைகள் ஏற்படுமாயின் தனக்கு அறிவிக்குமாறு
அன்றைய தினம் கூறினார். இதற்கு அமைய நான் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து
வெளியேறியவுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு என்னுடைய சுயவிபரக் கோவையொன்றையும்,
எனது தகைமைக்கு ஏற்ப தொழில் ஒன்றை பெற்றுத்தருமாறு கோரி விண்ணப்பித்தேன்.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எனக்கு பதில் ஒன்றும்
கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் கிளிநொச்சியில் உள்ள நாமல்
ராஜபக்ஷ எம்.பியின் பிராந்தியக் காரியாலயத்திற்கு இந்த கடிதத்தை எடுத்துக்
கொண்டு சென்றேன். அங்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம்
கொடுத்து எனது நிலையை எடுத்துக் கூறினேன்.
தனது கோரிக்கையின் அடிப்படையில் அலரி மாளிகைக்கு வருகை தருமாறு
அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று நான் இங்கு வந்ததும் எனக்கு
மட்டக்களப்பில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில்
நிர்வாகத்துறை உத்தியோகத்தர் நியமனத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ஷ வழங்கினார் எனவும் சுகிர்தா தெரிவித்தார்.