தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை; த.தே.கூ.வும் தமிழீழம் கேட்காது: சுமந்திரன்.

‘தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ‘அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு’ என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஆணை வழங்கியுள்ளனர். நான் யதார்த்தமாக பேச விரும்புகின்றேன். உங்களின் கைதட்டல்களுக்காக பேசுகின்றவன் நான் அல்ல. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக் கோரிக்கையை இலங்கை அரசு மறுதலிக்குமானால் நாளை நிலைமை மாறும். சர்வதேசம் எமக்கான தீர்வை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எமக்கு சர்வதேச பலம் கிடைத்திருக்கின்றது என்பதை ஜெனீவா தீர்மானம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நாங்கள் சுயநிர்ணய உரித்துடைய மக்கள் என்பதையும் தேசிய இனம் என்பதையும் இன்று உலகம் உணர்ந்துள்ளது.

வட – கிழக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியமாகத் தேவையான ஒன்று. சர்வதேசத்திற்கு எமது சுயாட்சியைப் பற்றிய நியாயப்பாடுகள் தெளிவாக தெரியும். சர்வதேச தேசிய இனத்தினுடைய நிலப்பரப்பில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசு முயல்கிறது. இது தடுக்கப்பட வேண்டியதொன்று. ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன. நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, எமது மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக்கான அமெரிக்காவினால் முடியும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தலமையுரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர,

“தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய பிரச்சனைக்கான தீர்வை கேட்டு நிற்கின்றோம். எமது பிரச்சனைக்கான தீர்வை எட்டுபதற்காக நாங்கள் ஆயுத ரீதியில் போராடினோம். அது உலகத்தின் சூழ்ச்சிகளினால் அழிக்கப்பட்டுள்ளது

உலகத்தின் ஓட்டத்தில் ஜனநாயக ரீதியாக எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளளோம். இளைய சமூதாயத்தை அரசியல் மயப்படுத்தி எமது உரிமைக்கான வென்றெடுக்க முயன்று வருகின்றோம், வடக்கு மற்றும் கிழக்கு என்பது எமது தாயக பூர்வீகபூமி. அந்த பூமியில் எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுய நிர்ணய உரிமையுடன் கூடியதான தீர்வை நாங்கள் எதிர்பார்கின்றோம் முள்ளிவாய்களில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலையில் இன்று இருக்கின்றோம். எமது உணர்வுகளுக்கு இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. என்றாவது ஒரு நாள் எமக்கான தீர்வு கிடைக்கும். அது சர்வதேசத்தின் கைகளில் தான் தங்கியிருக்கிறது” என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now