அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒத்துழைப்பு
வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய
கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு
எதிரான போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக யுத்தத்தை காட்டி இந்த
அரசாங்கம் மக்களை வசியப்படுத்தி வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே குரோத உணர்வுகளை இந்த அரசாங்கம்
தூண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் என்ற
கண்காட்சி ஜனாதிபதியின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் பாரியளவில் பணம்
செலவழித்து கண்காட்சி நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கண்காட்சியைப் பார்வையிடச்
சென்றவர்களுக்கான தற்காலிக மலசல கூடங்களுக்காக மட்டும் 700 மில்லியன் ரூபா
செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு
700 கிராமங்களை அபிவிருத்தி செய்திருக்க முடியும் என அவர்
தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்கு அனைவரும்
இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக நாட்டின் அனைத்து பிரதான
எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி பாரியளவில் போராட்டங்களை
நடத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ம்
திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பாரிய
ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக மங்கள
சமரவீர தெரிவித்துள்ளார்.