ஒருநாள்
சர்வதேச போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து அவ்வணியின் முன்னாள்
தலைவர் ரிக்கி பொன்டிங் நீக்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்திய அணிகளுடனான
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பொன்டிங்கின் துடுப்பாட்டம் மோசமாக
இருந்ததையடுத்து அவர் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அணியிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் அவர் 5 போட்டிகளில் பங்குபற்றி முறையே 2, 1, 6,2, 7 ஆகிய
ஓட்டங்களையே பெற்றார். இலங்கை அணியுடனான போட்டியின்போது அவர் அவுஸ்திரேலிய
அணிக்கு தலைமை தாங்கினார். அப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியைத்
தழுவியமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் தேர்வாளர் ஜோன் இன்வேராரிட்டி இது குறித்து பொன்டிங்கிற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
நிலைமை மோசமடைந்தால், போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்வேராரிட்டிக்கு
பொன்டிங் அறிவிக்கவேண்டும். அல்லது பொன்டிங் நீக்கப்படுவதாக அவருக்கு
இன்வேராரிட்டி அறிவிப்பார் என இருவருக்கும் இடையில் ஏற்கெனவே உடன்பாடு
காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்டிங் முன்னெப்போதுமில்லாதவாறு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் ஒற்றை இலக்க
ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததையடுத்து அவர் அணியிலிருந்து நீக்கப்படுவதாக ஜோன்
இன்வேராரிட்டி தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து பொன்டிங்
சகலவித போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிக்கக்கூடும் அல்லது டெஸ்ட்
துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

