
ஏறாவூரில் இயற்கைவழி தடுப்பு செயற்திட்டம் ஆரம்பம் !
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு
நோயினால் மிகமோசமான பாதிப்பிற்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்
பிரிவில் இப்பொழுது டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கைவழிமுறைச்
செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்; சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் எம். எச். எம். தாரிக் தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி வரை ஏறாவூரில்
சுமார் 863 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு
வயோதிப மாதுவும் ஆறு மாத வயதான சிசுவும் மரணம் அடைந்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
ஏறாவூரில் தீவிரமாகப் பரவியிருந்த டெங்கு
நோயைக் கட்டுப்படுத்த இதுவரையில் பல்வேறு ஒருங்கிணைந்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வந்தன. தொடர்ச்சியாகப் புகை விசிறப்பட்டதோடு அபேற் எனும் ரசாயனம் பூசப்பட்ட மண்துணிக்கை முடிச்சுக்கள்
ஏறாவூரிலுள்ள சுமார் ஒன்பதினாயிரத்துக்கு மேற்பட்ட கிணறுகளுக்குள்
போடப்பட்டிருந்தன. இவை ஆகக் கூடியது நான்கு மாதங்களுக்கே செயற்திறன்
மிக்கவை என்பதாலும் ரசாயனம் கலந்த பாவினைகளிலிருந்து மக்கள் விலகி
இயற்கையோடு இணைந்த சமநிலைக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்தான் நீண்ட காலத்
தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் கப்பி இன மீன்கள் கிணறுகளில்
விடப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்எச்எம். தாரிக் மேலும்
தெரிவித்தார். குருநாகலில் இருந்து சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட கப்பி
இன மீன்குஞ்சுகள் ஏறாவூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த கப்பி இன மீன்கள் இலங்கையில் மலேரியா ஒழிப்பிற்காகவும் முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கப்பி இன மீன்கள் கிணறுகளில் போடப்பட்ட
பின்னர் குடியிருப்பாளர்கள் கிணறுகளுக்குள் குளோரின் இடாமல்
வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஏனெனில் குளோரின்
ஏற்படுத்தும் தாக்கத்தினால் இந்த டெங்கு நுளம்புகளை அழிக்கும் மீனினம்
அழிந்து விடும் என்பதே காரணமாகும்.
நீரினால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை
தவிர்த்துக் கொள்வதற்காக கிணறுகளிலிருந்து பெறும் நீரை கொதித்து ஆற
வைத்துப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
குப்பி இன மீன்களை கிணறுகளுக்குள் போடும்
இயற்கை வழி டெங்குத் தடுப்புச் செயற்திட்டம் வெற்றியளிப்பதற்குப் பொது
மக்களின் ஒத்துழைப்பை சுகாதாரப் பகுதியினர் நாடி நிற்கின்றனர்.