ஆணைக்குழு அறிக்கை மற்றும் சனல்4 போர்க்குற்றச்சாட்டு தொடர்பில்
கடந்த 10ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் ஆவணமொன்றை
சமர்ப்பித்தமை, பாரிய சந்தேகத்தை எழுப்புவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும
குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே
அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆவணமொன்றை
எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதில் சனல்-4 குற்றச்சாட்டு தொடர்பாகவும், 2002இல் செய்துகொள்ளப்பட்ட
புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்,
இந்த செய்தி சிங்கள ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகவில்லை. இந்த விடயத்தின்
பின்னணி குறித்து பாரிய சந்தேகம் எழுகிறது.
மேலும், இலங்கைக்கு எதிரான மேலைத்தேய சக்திகளின் சதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் துணை போவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு பாராளுமன்றில் அரசாங்கத்திற்கெதிராக செய்ற்படடு, ஐ.தே.க. தலைவர்
பாரிய காட்டிக்கொடுப்பொன்றை செய்துள்ளார். இவர் இலங்கை நாட்டவரா? என்ற
சந்தேகம் எழுகிறது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில்
இலங்கையை பலி எடுக்கும் நடவடிக்கையில் சர்வதேச தரப்புகள் முயற்சிகள்
மேற்கொண்டுள்ளன.
வியட்னாம், கொரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் யுத்தக்
குற்றங்கள் புரிந்த சில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிரான யுத்தக்
குற்றச்சாட்டுக்களை சுமத்த முயல்கின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஐ.தே.க. தலைவர் தனது செயலினூடாக சர்வதேச
சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் டலஸ் அலகப்பெரும
தெரிவித்துள்ளார்.