பொலிஸ் மாதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலிஸ் அதிபருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட்டின் மனைவி மற்றும் புதல்வி ஆகியோர் நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, கொழும்பிலுள்ள மாலைதீவின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இலங்கையிலுள்ள மாலைதீவு பிரஜைகள் சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததோடு, அந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பை வழங்கும் பிரிவினர், தொடர்ந்தும் புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியும், அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காட்சிகளை ரொய்டர் வெளியிட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையினால், 18 பொலிஸ் நிலையங்கள் மற்றும் இரண்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மலே நகரிலுள்ள அவரது வீட்டில் சுதந்திரமாக உள்ளார் எனவும் ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மொஹட் நஷிட்டை கைது செய்யுமாறு குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும், அவர் கைது செய்யப்படமாட்டார் என தற்போதைய ஜனாதிபதி மக்களுக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.