பேஸ்புக்கின் அடுத்த பரிமாணம் நேற்று ஆரம்பம்?



சமூகவலையமைப்புகளின் ஜாம்பவானான பேஸ்புக் பங்குச் சந்தையில் நுழையவுள்ளமை நாம் அறிந்ததே. 

இந்நிலையில் அதன் முதற்கட்டமாக பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான (Initial public offering) முதற்கட்ட நடவடிக்கையை இன்று புதன்கிழமை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களை பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ் வழங்கலின் மூலம் முதற்கட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை ஈட்டிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது முதற்கட்டத் தொகை எனவும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப்பொறுத்து இத்தொகை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை பேஸ்புக் பங்குகளை விநியோகிப்பது தொடர்பில் நஸ்டக் (Nasdaq stock market) மற்றும் நியூயோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆகியவற்றின் இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மே மாதம் முதலே பேஸ்புக் பங்கு வழங்கலில் ஈடுபடும் எனத் தெரிகின்றது. அதுவரை எத்தனை பங்குகள் வழங்கப்படும் எந்த விலையில் வழங்கப்படும், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பீட்டுப் பெறுமதி போன்ற விடயங்கள் இப்போதைக்கு தெரியவரும் சாத்தியமில்லை.

எனினும் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பேஸ்புக்கின் பெறுமதி 75 - 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கணிப்பிடப்படலாம் என நிதிச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் தனது ஆரம்ப பொது வழங்கலின் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியிருந்தது.

இதுவே இணைய நிறுவனமொன்று திரட்டிக்கொண்ட மிகப்பெரிய தொகையாக இருந்து வருகின்றதெனினும் பேஸ்புக் இதனை விரைவில் முந்தவுள்ளது.

பேஸ்புக் கடந்த வருடம் விளம்பரங்கள் மூலமாக 4.27 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியிருந்தது.

அமெரிக்க வரலாற்றில் பிரபல நிறுவனங்களான Visa 19 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், General Motors 18 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், AT&T Wireless Group 10.62 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், Kraft Foods 8.68 அமெரிக்க டொலர்களையும் ஆரம்ப பொது வழங்கலின் மூலம் ஈட்டிக்கொண்டுள்ளன.

தற்போது வோல்ஸ்ரீட்டில் பேஸ்புக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றனர்.

எது எவ்வாறாயினும் பேஸ்புக் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்.


Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now