உலகில் அதிக உரோமங்களை கொண்ட சிறுமியென கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்
பதிவு செய்யப்பட்ட 12 வயதான சிறுமி, தான் கல்வி கற்கும் பாடசாலையில்
மிகவும் பிரபலமான மாணவியாக விளங்குவதுடன் தான் ஒரு வைத்தியராக வேண்டுமென
விரும்புவதாக தெரிவித்துள்ளாள்.
பாங்கொக் நகரிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் சுபத்திரா சசுபன் எனும்
மேற்படி சிறுமியை அநேகமானவர்கள் மோசமான பட்டப்பெயர்களால் அறிந்து
வைத்திருந்தனர். ஆனால் குறிப்பிடப்படும் வகையில் அச்சிறுமி கல்வியிலும்
சிறந்து விளங்குகிறாள்.
அரிதான மரபியல் கோளாறு காரணமாக அச்சிறுமியின் முகம் உரோமங்களால்
மூடப்பட்டுள்ளது. அவளின் கைகள், கால்கள், முதுகிலும் அதிக உரோமங்கள்
காணப்படுகின்றன. உலகில் 50 பேர் மாத்திரம் இந்நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இந்த நிலையினால் பாடசாலையின் ஆரம்ப நாட்களில் இரக்கமற்ற கிண்டல்களுக்கு
முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது அவள் பாடசாலையின்
புகழ்பெற்ற மாணவியாக விளங்குகிறாள்.
தான் மருத்துவராக வரவேண்டுமென விரும்புவதாகவும் இதன் மூலம் தனது நோய்
குறித்து ஆராய்வதுடன் தனது குடும்பத்தினரையும் பராமரிக்க முடியும் என
நம்புவதாகவும் அவள் கூறியுள்ளாள்.