
இலங்கைக்கெதிராக நாளைய தினம் இடம்பெறவுள்ள தீர்மானம் மிக்க மூன்றாவது
இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க்,
வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் இருவரும் பங்குபெற மாட்டார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்தொடைத் தசைநாரில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைக்கல் கிளார்க்கும்,
பின்பகுதியில் ஏற்பட்ட உபாதை ஜேம்ஸ் பற்றின்சனும் நாளைய போட்டியில்
பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மைக்கல் கிளார்க், அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச்
சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப்
போட்டிகளிலும் பங்குபெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய அணி சார்பாக நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில்
மைக்கல் கிளார்க் இற்குப் பதிலாக பீற்றர் பொறஸ்ற் உம், ஜேம்ஸ்
பற்றின்சனுக்குப் பதிலாக அணிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள நேதன்
லையனும் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நேதன் லையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருக்காத
நிலையிலும், ஜேம்ஸ் பற்றின்சனின் காயம் மற்றும் நேதன் லையனின் உள்ளூர்
போட்டிகளில் காட்டிய திறமை வெளிப்பாடுகள் ஆகியன காரணமாக இறுதிநேரத்தில்
உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி சார்பாக முழுமையான உடற்தகுதியடையாத காரணத்தால் அணியில்
இடம்பெற்றிராத அன்ஜலோ மத்தியூஸ் முழுமையாகக் குணமடையும் பட்சத்தில் சாமர
கப்புகதரவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்படுவார். அதைத் தவிர வேறெந்த
மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வாய்ப்புக்களில்லை.
நாளைய மூன்றாவது இறுதிப்போட்டியும், நேற்றைய போட்டி இடம்பெற்ற அடிலெய்ட்
ஓவல் மைதானத்திலேயே இடம்பெறவுள்ள நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற
மனத்திடத்துடன் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.