
இவ்வாண்டு இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான (சர்வதேச டுவென்டி டுவென்டி உலகக்கிண்ணம் என முன்னர் அழைக்கப்பட்டது) நுழைவுச்சீட்டு விற்பனையின் உத்தியோகபூர்வத் தொடக்க விழா எதிர்வரும் சனிக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை நேரப்படி மாலை 6.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிகழ்வில் முதலாவது நுழைவுச்சீட்டை இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொள்ளவுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், இலங்கை ஆண்கள், பெண்கள் அணி சார்பாக பிரதிநிதிகளும், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும், பிரபல இசைக்கலைஞர்களும், நடனக் கலைஞர்களும், பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ரசிகர்களுக்கு போட்டிகளுக்கான 800 நுழைவுச்சீட்டுக்கள் இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளன. 20 போட்டிகளுக்கான 20 சோடி நுழைவுச்சீட்டுக்கள் வீதம் வழங்கிவைக்கப்படவுள்ளது. காலி முகத்திடல் நிகழ்விற்கு வருகைதரும் அனைவருக்கும் வாயிலில் வைத்து வழங்கப்படவுள்ள அட்டையொன்றை வைத்து இடம்பெறும் குலுக்கல் அடிப்படையில் இந்நுழைவுச்சீட்டுக்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டுக்களின் விற்பனை மார்ச் 26ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் இலங்கை ரசிகர்களுக்கென ஆரம்பிக்கவுள்ளது. நான்கு நாட்கள் இலங்கை ரசிகர்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனைக்காக விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
குழுநிலைப் போட்டிகளுக்கு ஒருவர் ஆகக்கூடிய தலா 6 நுழைவுச்சீட்டுக்களும், சுப்பர் 8 போட்டிகள், அரையிறுதி, இறதிப்போட்டிகளுக்கு ஒருவர் அதிகட்சமாக 4 நுழைவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளம் மூலமும் நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைக் காட்டி நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழுநிலைப் போட்டிகளுக்கான பெறுமதி நுழைவுச்சீட்டொன்று 0.25 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து ஆரம்பிப்பதுடன், இறுதிப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு 2.50 ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 45 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரசிகர்களுக்கான நுழைவுச்சீட்டுக்கள் 30ஆம் திககி காலை 9 மணி (ஜி.எம்.ரி. நேரம்) முதல் ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாம் நிலையாக ஓகஸ்ட் முதலாம் திகதியும் நுழைவுச்சீட்டு விற்பனை இடம்பெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகல சர்வதேச மைதானம், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளன. இத்தொடரில் 12 சர்வதேச அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.