
எனவே சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற கசப்பான பாடத்தை அரசாங்கம் கற்றுக்கொண்டு வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
ஐநா மனித உரிமை சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டிய சாத்தியம் தற்சமயம் அதிகம் இருப்பதாகவும், ஆனால் தீர்மான வாசகங்களை முழுமையான ஆய்வு செய்த பிறகு தமது இறுதி நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் எனவும், இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைகான தீர்வை விட மனித உரிமைகள் தொடர்பிலேயே அதிக கவனம் தீர்மான வாசகங்களில் செலுத்தப்பட்டுள்ளதால், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மேலதிக கவனம் அதில் செலுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய கருதுவதாக தெரிய வருகிறது.
எனவே இந்தியாவின் இறுதி நிலைப்பாடு தெரிய வரும் வரை நாம் கருத்து தெரிவிக்க முடியாது.
எது எப்படி இருந்தாலும், கடந்த கால ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் ஆதரவாக இருந்த நண்பர்கள் இன்று படிப்படியாக தமது நிலைபாடுகளை மாற்றி வருவது கண்கூடு. இலங்கைக்கு ஆதரவாக இருக்க முடியாத சூழல் இன்று அரசாங்கத்தின் நண்பர்களுக்கு உருவாகி வருகிறது. இதற்கான முழுமையான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டும்.
அமெரிக்காவையும், இந்தியாவையும் எதிர்த்து இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தினாலும் அவற்றை உலகம் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது அரசாங்கத்திற்கும், அரசு ஆதரவாளர்களுக்கு உலகம் தந்துள்ள செய்தியாகும்.
மனித உரிமை விவகாரத்திலும் சரி, தேசிய இனப்பிரச்சினை விவகாரத்திலும் சரி, எந்தவித நியாயமான இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டீர்கள். ஆனால் உலகமும், தமிழ் மக்களும் கண்ணை மூடிக்கொண்டு உங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கொள்கை இன்று தோற்று போய்விட்டது.
சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இந்த பாடத்தை படித்துள்ள இலங்கை அரசு, வெகு விரைவில் உள்நாட்டிலும் இந்த பாடத்தை படிக்கப்போகின்றது. இதன் எதிரொலியாக அரசாங்கம், வெகு விரைவில் பாரிய அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உள்நாட்டில் சந்திக்கப்போகின்றது.