கொள்ளுப்பிட்டியில்
உள்ள ரேணுகா ஹோட்டல் அறையில் இடம்பெற்ற தேனிலவு படுகொலை தொடர்பாக கொழும்பு
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பம் ஆகி
உள்ளன.
நீதிவான் கனிஸ்கா விஜேரட்ண முன்னிலையில் வழக்கு இடம்பெற்றது.
புதிதாக
திருமணம் செய்த தமிழ் பெண் சகிலா கனகசபை கொல்லப்பட்டு இருக்கின்றார். இவர்
பிரித்தானியாவில் இருந்து வந்தவர். லண்டனில் Metropolitan Police இல்
வேலை பார்த்து வந்திருக்கின்றார்.
படுகொலைச் சந்தேகநபர் இவரின் புதிய கணவரான சின்னத்தம்பி ஞானச்சந்திரன்.
ரேணுகா
ஹோட்டலின் பாதுகாப்புக் கமராவில் ஞானச்சந்திரனின் படங்கள் பதிவாகி உள்ளன.
இப்படங்கள் பரிசோதனைக்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டு உள்ளன என்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் துமிந்த குலசேகர மன்றில்
தெரிவித்தார்.
மரண பரிசோதனை அறிக்கை இன்னமும் அவருக்கு கிடைக்கப் பெறவில்லை என்று நீதிவான் குறிப்பிட்டார்.
சந்தேகநபரை
ஆதரித்து சட்டத்தரணி நளின் வீரக்கோன் ஆஜராகி இருந்தார். உளவியல் நிபுணர்
வைத்திய கலாநிதி நெவில் பெர்ணாண்டோ உள்ளிட்ட வைத்தியர்கள் குழு ஒன்று
விளக்கமறியல் சாலையில் வைத்து ஞானச்சந்திரனை பரிசோதனைகள் செய்தனர் என்றும்
ஞானச்சந்திரனை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க வேண்டும் என்று சிபாரிசு
செய்து உள்ளார்கள் என்றும் சட்டத்தரணி வாதாடினார். எனவே ஞானச்சந்திரனை
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்.
ஞானச்சந்திரனை
பரிசோதித்த மருத்துவர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்த பிறகு இது குறித்து
தீர்மானம் எடுப்பார் என்று நீதிவான் அறிவித்தார்.
ஹோட்டலின் பாதுகாப்பு கமராவால் பதிவாகி உள்ள வீடியோ திரிபுபடுத்தப்படலாம் என்று சட்டத்தரணி தெரிவித்தார்.
ரேணுகா ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கின்ற லக்ருவான் பெர்ணாண்டோ முதலாவது சாட்சியாக ஆஜராக்கப்பட்டார்.
இவரை சாட்சியத்தை பொலிஸ் அத்தியட்சகர் திஸாநாயக்க நெறிப்படுத்தினார்.
முதலாம்
மாடியில் உள்ள அறை இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருந்தது, அதற்குள்
இருந்து சகிக்க முடியாத நாற்றம் வந்தது, அறைக்குள் செல்ல சொல்லி தலைமை
அதிகாரி உத்தரவிட்டார், கட்டிலில் போர்வையால் மூடப்பட்ட நிலையில் ஒரு
பெண்ணின் தலை மூடப்பட்டு இருந்தமையை கண்டார் என்று தெரிவித்தார் சாட்சி.
அடுத்த
சாட்சியாக ஹோட்டலின் துப்புரவுப் பணியாளர் குமாரி ரட்ணாயக்க ஆஜரானார்.
ஹோட்டல் அறையை துப்புரவு செய்ய சென்றபோது ஒருவரால் அறையில் இருந்து
வெளியேற்றப்பட்டார் என்றார். அந்த ஒருவர் படுகொலைச் சந்தேகநபரான
ஞானச்சந்திரன்தான் என்று அடையாளம் காட்டினார்.
இந்நபரை
முன்பு கண்டிருக்கின்றீரா? என்று வினவப்பட்டது. ஓம் என்று உறுதியாக
சொன்னார் சாட்சி. படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றவரையும் முன்பு பார்த்து
இருக்கின்றார் என்றும் சொன்னார்.
சகிலா கனகசபையின் சகோதரரான சங்கநாதன் நீதிமன்றத்துக்கு தெரிவித்தவை வருமாறு:-
-நான்
உரைபெயர்ப்பாளராக உத்தியோகம் பார்த்தவன். கல்கிசையில் வசிக்கின்றேன்.
சகோதரி சகிலா இரு பிள்ளைகளின் தாய். லண்டனில் Metropolitan பொலிஸில் வேலை
பார்த்து வந்திருக்கின்றார். இலங்கை வந்தபோது சகோதரி ஹோட்டல்களில்தான்
தங்கினார். இரு முறை என் வீட்டுக்கு வந்தார். சகோதரியை கடந்த பெப்ரவரி 20
ஆம் திகதி இறுதியாக பார்த்தேன். நான்தான் சடலத்தை பிரேத அறையில் வைத்து
அடையாளம் காட்டினேன்.