இலங்கையில் இன்று மூன்று ஜனாதிபதிகள்: மனோ கணேசன்

இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவை அடுத்து விமல் வீரவன்ச இரண்டாவது ஜனாதிபதி, சம்பிக்க ரணவக்க மூன்றாவது ஜனாதிபதி.

மஹிந்தவின் கருத்து என்று சொல்லி, ஜெனீவா சென்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என வெளிநாட்டில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தது அரசாங்க தூதுக்குழு. இன்று உள்நாட்டில் பார்த்தால் கதையே வேறு. இங்கே இன்று இரண்டாவது, மூன்றாவது ஜனாதிபதிகள் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவையே தூக்கி எறிந்துவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற எதிரணி போராட்ட கூட்டத்திலேயே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார். கண்டி மத்திய சந்தை பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது...

விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க

நமது  இரண்டாம் ஜனாதிபதி விமல் வீரவன்ச கற்றுக்கொண்ட ஆணைக்குழுவை திட்டி தீர்த்து, அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்கிறார். நாளாந்தம் இவரது வேலை இதுதான். இவரது அமெரிக்க எதிர்ப்பு கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவருக்கான பதிலை இவரது அமைச்சரவை சகா டிலான் பெரேரா சொல்லிவிட்டார். சாரத்தை கட்டிக்கொண்டு தலைக்கீழாக நிற்பவர் இவர் என டிலான் பெரேரா சொல்லிவிட்டார். சாரத்தை கட்டிக்கொண்டு தலைகீழாக நின்றால் என்ன நடக்கும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே நான் அந்த சாரம்கட்டி தலைகீழாக நிற்கும் கதையை இங்கே மீண்டும் விபரித்து சொல்ல விரும்பவில்லை.

மூன்றாம் ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க இந்தியாவை திட்டி தீர்க்கிறார். ஜெனீவாவிலே அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்துவிட்டது என்பதுதான் இவர்களுக்கு கோபம். இந்த கண்மூடித்தனமான கோபத்தில் இவர்களுக்கு, இவர்கள் நடத்திய போருக்கு இந்தியா செய்த உதவிகள் மறந்து விட்டது.

2009இல் யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில் சர்வதேச படைகள் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு வராமல் தடுத்து நிறுத்தியது இந்தியா என்பது எமக்கு தெரியும். இது இவர்களுக்கும் தெரியும். ஆர்2பி என்ற விதியின் கீழ் இலங்கையிலே சிறுபான்மை மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி, ஐநா படை இலங்கைக்கு வாராததன் காரணம் இந்தியாதான். இந்தியாதான் தலையிட்டு அது நடைபெறாமல் தடுத்து நிறுத்தியது. சர்வதேச படைகள் இலங்கைக்குள் வந்திருந்தால், இன்று நிலைமையே தலைகீழாக மாறி இருக்கும். இந்த உண்மைகள் தெரிந்தும் இவர்கள் இன்று இந்தியாவை திட்டி தீர்க்கிறார்கள்.    

இவர்களது கூட்டாளித்தான் தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர. இந்த மனிதர் இன்னொரு இனவாத முட்டாள். இவர் ஒருபடி மேலே போய் இந்தியா விரைவில் துண்டு துண்டாக உடையவேண்டும் என சாபம் போடுகிறார். நல்ல சாபம் இது. இந்தியா துண்டு துண்டாக உடைந்தால், இன்றைய தமிழ்நாடு மாநிலம் தனித்தமிழ் நாடு ஆகும். தனி தமிழ்நாட்டின் முதல் வேலை, இலங்கையில் தமிழர்களை இணைத்துக்கொண்டு இங்கே தனி தமிழ் ஈழத்தை அமைப்பதாகத்தான் இருக்க முடியும்.

எனவே தமிழ் ஈழத்துக்கு இவர்கள்தான் இன்று வழி காட்டுகிறார்கள். இவர்களுக்கு தனி தமிழ் ஈழம் தேவையா? அப்படியானால் ஏன் ஐயா எங்களையும், கூட்டமைப்பையும் பார்த்து பிரிவினைவாதி, ஈழம்வாதி என்றெல்லாம் சொல்லி திட்டுகிறீர்கள்?

இதன் பின்னால் உள்ள அரசியல் உண்மை இதுதான். இந்த முட்டாள்களுக்கு நேற்று முதல்நாள் நடந்த வரலாறு மறந்துவிடுகிறது. எதிர்காலம் பற்றிய தூர நோக்கும் கிடையாது. இவர்களது அரசியல், அன்றாட காய்ச்சி அரசியல் ஆகும். கடந்த காலம், எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு தினமும் அன்றைய தினம் தங்கள் இனவாத சிந்தனைக்கு எட்டுவதை மாத்திரம் பேசுகிறார்கள்.

இந்த அடிப்படையில்தான், தமிழ் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் இவர்கள் பேசுகிறார்கள். தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படுவதையும் இவர்கள் இந்நோக்கில்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆறுமுகன் தொண்டமான்

இன்றைய இலங்கையில் இன்னொரு அதிசய அரசியல்வாதி ஆறுமுகன் தொண்டமான். இவரை இன்று மாண்புமிகு அமைச்சர் என அழைப்பதா அல்லது கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் என அழைப்பதா என எனக்கு தெரியவில்லை. இன்று இவர் இந்த அரசாங்கத்தில் திரிசங்கு நிலையில் இருக்கிறார். மேலேயும் போக முடியாது, கீழேயும் வர முடியாது என்ற திரிசங்கு நிலை இவருக்கு இன்று ஏற்பட்டு உள்ளது.

இவருக்கு வாக்களித்து பதவி வாங்கித்தந்த அப்பாவி தோட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு தமது தலைவன் இன்று அமைச்சரா, வெறும் எம்பீயா என தெரியாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசில் இருக்கிறதா என்பதுவும் நிச்சயமாக தெரியவில்லை. ஏனென்றால் இதொகா தலைவர் முத்து சிவலிங்கம், தொண்டமானுடன் இருக்கிறாரா அல்லது பசில் ராஜபக்ஷவுடன் இருக்கிறாரா என மக்களுக்கு விளங்கவில்லை. 

ஜனாதிபதியுடன் இவர் இன்று முரண்பட்டுள்ள காரணத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையக மக்களின் சம்பள பிரச்சினை, மண்ணெண்ணெய் பிரச்சினை, கோதுமை பிரச்சினை, விலைவாசி பிரச்சினை, கொழுந்து பிரச்சினை ஆகியவற்றுக்காக இந்த மலையக தலைவன் சண்டை போடவில்லை. இதை மலையக மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் கீழ் வரும் ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை பதவி நீக்கம் செய்து விட்டார். இவர் அந்த பணிப்பாளரை பதவி  நீக்கம் செய்துவிட்டு தனது வீடு போவதற்குள், அந்த பணிப்பாளருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு விட்டது. இதுதான் பிரச்சினை.

அந்தளவிற்கு அந்த பணிப்பாளருக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது. இதுதான் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசாங்கத்துக்குள் இருக்கின்ற மரியாதை. இவர்களது பந்தா எல்லாம் அப்பாவி மலையக மக்களிடம்தான் என்பதை தோட்ட தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மரியாதை இல்லாத இடத்தில் இன்னமும் ஒட்டிக்கொண்டு இவர் இருக்கிறார். தன்மானம், சுய மரியாதை என்பதெல்லாம் பதவியின் முன் இன்று தோற்றுபோய் விட்டன என்பதுதான் உண்மை.

நாடாளுமன்ற பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அன்றும், இன்றும்  தலைவன். ஏனென்றால் நான் தன்மானம் கொண்ட மறத்தமிழ் மானஸ்தன். தமிழ் மக்கள் என்னை, எனது கொள்கைகளை, எமது கட்சியை மதிக்கிறார்கள். தமிழ் மக்கள் என்னை ஏற்றுகொள்ளும்வரை நான் தலைவன்தான். இலங்கையில் தமிழன் வாழும் பிரதான பிராந்தியங்கள் வடக்கு, கிழக்கு, மேலகம், மலையகம் ஆகிய நான்கு ஆகும். மேலகத்திலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் என்னை மதிக்கிறார்கள். இந்த அந்தஸ்து இவர்களுக்கு இல்லை. ஏனென்றால் நான் மானமுள்ள மறத்தமிழன். அதை நான் நடைமுறையில் காட்டி  இருக்கிறேன். நாடாளுமன்ற பதவி இருந்தும், ஆறுமுகன் தொண்டமான் போன்றவர்கள் மண்ணாங்கட்டி தமிழர்கள். இந்த மண்ணாங்கட்டிகள் இன்று தமிழ் மக்களின் சாபக்கேடுகள். 

இன்று ஜனாதிபதி இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அதனால் இந்த மனிதர் இன்று திரிசங்கு நிலையில் இருக்கிறார். அதாவது ஜனாதிபதி இவருக்கு வழங்கியிருப்பது உண்மையிலேயே சங்குதான். எத்தனையோ கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  நான் இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.

இன்றைய நிலைமை என்ன? தான் பணி நீக்கம் செய்த பணிப்பாளர் விடயத்தையே மறந்துவிடுகிறேன், பதவியில் மீண்டும் அமர்த்துங்கள் என கெஞ்சும் நிலைமை இவருக்கு இன்று ஏற்பட்டு விட்டது. அதாவது ‘பிச்சை வேண்டாம் ஐயா, நாயை பிடியுங்கள் போதும்’ என்று மன்றாடும் நிலைமை ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now