முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம்
கிராமத்தின் கிராம அலுவலர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அடியாட்களால்
கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாது,
கிராம மக்களுக்கு வழங்கவென சேவாலங்கா
நிறுவனத்தினால் ஒரு தொகுதி மிதிவண்டிகள் வன்னிவிளாங்குளம் கிராமத்திற்கு
கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. குறித்த மிதிவண்டிகளை தாம் குறிப்பிடுகின்ற
நபர்களுக்கே வழங்கவேண்டும் எனத் தெரிவித்த தீபன் என்பவர் தலைமையிலான
றிசாட் பதியுதீனின் அடியாட்கள் கிராம அலுவலர் பிரதீபனுடன்
முரண்பட்டிருகின்றனர்.
அதற்கு பதிலளித்த கிராம அலுவர் உண்மையில்
பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவில் உள்ளதாகவும் அவர்களுக்கே வழங்கவேண்டும்
என்றும் வாதிட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து றிசாட்டின் கையாட்கள் மூவர்
இணைந்து கிராம அலுவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அதேவேளை உடனடியாக
நடைமுறைக்கு வரும் வகையில் சிராட்டிக்குளம் கிராமத்திற்கு கிராம அலுவர்
இடமாற்றத்திற்கும் உட்படுத்தப்பட்டிருப்பதாக அந்தக் கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்.
அடாவடிச் சம்பவத்தினை அடுத்து அந்தக்
கிராம மக்கள் அமைச்சருக்கும் அடியாட்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட முற்பட்டபோது இராணுவத்தினர் தலையிட்டு அதனைக் கட்டுப்படுத்தியதாக
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.