அரசியல் வாதிகளது
தலையீடுகளில் குறிப்பிட்ட சில பட்டதாரிகளுக்கு மட்டும் வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டு வருவது மீதமுள்ள பட்டதாரிகளுக்கு அநீதி இழைப்பதாகும் என
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் சீரான விதிமுறை ஒன்று இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பரிந்துரைகளுடன் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிப் பயிற்சியாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி மார்ச் 30 என நிர்வாக சேவைகள் அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் குறிக்கப்பட்ட அந்தத் திகதிக்கு
ஒரு மாதத்திற்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின்
பரிந்துரைகளில் நியமனம் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக மீதமாக உள்ள
பட்டதாரிகள் கடும் அநீதிக்குள்ளாகியுள்ளனர் என்று வேலையற்ற பட்டதாரிகள்
சங்கத்தின் இணைப்பாளரான தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள தகவல்களின்
அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகியோருக்கு 75 பேரும்,
மாகாணசபை உறுப்பினரொருவருக்கு 05 பேரும், மாகாண ஆளுநர் ஓருவருக்கு 50 பேர்
என்றவாறு ஒதுக்கப்பட்டு அரசியல் பரிந்துரைகளுக்கு அமைய பட்டதாரிகள்
பதவிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
42 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாடளாவிய ரீதியில் இருக்கையில் இவ்வாறாக சட்டத்திற்கு முரணான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வருவது மற்றைய பட்டதாரிகளை அவமதிப்புக்குள்ளாக்கும் செயலெனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறாக சட்டத்திற்கு முரணான வகையில் அடாத்தாகப் பதவிகளை வழங்கும் அணுகுமுறை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் ஒரு போதும் இருந்ததில்லை எனவும் தம்மிக்க முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இதனை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
பட்டதாரிகள் நியமனங்களில் அரசியல் செல்வாக்கு; பட்டதாரிகள் சங்கம் வழக்கு தாக்கல்
Labels:
இலங்கை