மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை : ஜனாதிபதி

மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை உள்ளதாகவும் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதற்கும் உண்மைக்கும் இடையில் தெளிவான வித்தியாசமுள்ளதாகவும் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

நாரஹென்பிட்டியில் ஊடக அபிவிருத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஏனைய நாடுகளின்மீது மேற்குலக ஊடகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் யுத்தத்தின்போது இது தெளிவாக அவதானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடித்து மூன்று வருடங்களின் பின்னரும் மேற்குலக ஊடகங்களும் சில உள்ளூர் ஊடகங்களும் இந்த கவலையளிக்கும் போக்கிலிருந்து மாறியதை நாம் காணவில்லை. எல்.ரி.ரி.ஈ. முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 10,000 பேருக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் ஒன்றிணைத்தமை, இடம்பெயர்ந்த 300,000 பேரை மீளக் குடியமர்த்தியமை, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் பாரிய புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் போன்ற அரசாங்கத்தின் பணிகளை அல்லது நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் ஊடகங்களில் காணவில்லை.

கவலையளிக்கும் வகையில், எல்.ரி.ரி.ஈ. அனுதாபிகளின் குரல்களையே நாம் இன்னும் கேட்கின்றோம். துரதிஷ்டவசமாக இதை நிறுத்த முடிந்த நிலையில் நாம் இல்லை" என ஜனாதிபதி கூறினார்.

சில ஊடகங்கள் தாய்நாட்டை குறித்த பொய்யான பிரச்சாரங்களை பரப்புகின்றன. ஆனால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் பாரபட்சமான ஊடங்களின் பாதகமான தாக்கத்திலிருந்து தாய்நாட்டை பாதுகாப்பதற்கு சுயாதீனமான பாரபட்சமற்ற ஊடங்களும் தகவல் திணைக்களமும் கடுமையாக பாடுபட வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடகமானது சமூக, அரசியல் கோளாறுகளிலிருந்து மக்களுக்கு வழிகாட்டி, பாதுகாப்பளிக்கிறது என்பதால் அது பொதுமக்களின் காவல்நாயாகும். கலாசார மற்றும் ஒழுக்க பெறுமானங்கள் குறித்து எழுதுதல் பரப்புதல், அரசியல், சமகால விவகாரம், பொருளாதாரம், வர்த்தகம், கலை மற்றும் பிரச்சினைகள் குறித்து எழுதுவது என்பன ஊடங்களின் ஏனைய பணிகளாகும் எனவும் அவர் கூறினர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now