பிரபாகரன் கொல்லப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சி திரைப்படமாக விரைவில் வெளியிடப்படும்: இராணுவ தளபதி

\
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதல்களின் போது  கொல்லப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இது தவிர அவர் படையினரால் உயிரோடு கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்று செனல் 4இன் புதிய வீடியோ காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யானது. பிரபாகரன் கொல்லப்பட்டதான வீடியோ காட்சிகள் இராணுவத்திடம் உள்ளன. அதனை வெகு விரைவில் உலகுக்கு வெளிப்படுத்துவோம் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் மீளக் குடியேறிய பொதுமக்களுக்காக இராணுவத்தினரால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்து மேற்பார்வை செய்வதற்காக இராணுவ தளபதி இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.

துணுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள 69ஆவது காலாற்படை முகாமில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட இராணுவ தளபதி அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய,

'ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை. இவை இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும். இலங்கைக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள செனல் 4இன் புதிய வீடியோ காட்சியானது உலகத்தை முட்டாளாக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதில் எமது படையினர் இராணுவ நடவடிக்கையின் போது எவ்வித மனித உரிமை மீறல்களையும் மேற்கொள்ளவில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவை குறித்து விசேட ஆய்வொன்று நடத்தப்படும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவொரு சிறிய நாடு. இவ்வாறானதொரு நாடு யுத்தமொன்றை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு வெளிநாடுகள் பொறாமைப்படுகின்றன. காரணம், அந்நாடுகளில் ஆயுதங்கள், பணம் உள்ளிட்ட எல்லா வசதிகளும் இருந்தும் இன்னமும் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

அதனாலேயே, எமது நாட்டுக்கு எப்படியாவது அழுத்தத்தைப் பிரயோகித்து நாம் பெற்றுக்கொண்ட வெற்றியை அகௌரவத்துக்கு உட்படுத்த வெளிநாடுகள் முயற்சிக்கின்றன.

இதேபோன்று இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமது இராணுவத்தின் மீது எவ்வாறெனினும் தாக்குதலொன்றை நடத்தவே சர்வதேசம் காத்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், எமது படையினர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

செனல் 4 நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், கடந்த வருடம் அந்நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செனல் 4இன் முதலாவது வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பொய்யானவை என இலங்கை அரசாங்கத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்நிறுவனம் புதிய வீடியோ என்றொரு மற்றொரு வீடியோவினை வெளியிட்டு உலகை முட்டாளாக்கப் பார்க்கின்றது' என்று இராணுவ தளபதி மேலும் கூறினார்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now