சிரியாவில்
நடந்து வரும் பயங்கரமான சண்டையின் காரணமாக, நாட்டை விட்டு மக்கள்
தப்பித்து வெளியேறி விடாதபடி, துருக்கி, லெபனான் எல்லையில், சிரியா
கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளதாக, நியூயார்க்கில் செயல்பட்டு வரும்
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக, கடந்த ஓராண்டிற்கும்
மேலாக, மக்கள் போராடி வருகின்றனர். சிரியா ராணுவத்தில் இருந்து பிரிந்த
ராணுவ வீரர்கள், சிரியா விடுதலை ராணுவம் என்ற எதிர்த் தரப்பு ராணுவத்தை
நிறுவி, பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர். இதுவரையிலான போராட்டத்தில்,
எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐ.நா.,
தெரிவித்துள்ளது.
இவர்களில், பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் தான்.
அதேநேரம், அதிபரின் ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து, வெளிநாடுகளுக்கு,
30 ஆயிரம் பேர் அகதிகளாகச் சென்றுள்ளதாகவும், இரண்டு லட்சம் பேர்
உள்நாட்டில் அகதிகளாக இருப்பதாகவும், அகதிகளுக்கான ஐ.நா., ஐகமிஷனர்
தெரிவித்துள்ளார்.
முடிவு கிடைக்குமா? : அதே நேரம், சிரியா எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஒரே
அமைப்பாக இணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில், அங்கு நடக்கும் சண்டையை
உடனடியாக நிறுத்துவது குறித்து, ஐ.நா., – அரபு லீக் ஆகியவற்றின் சிறப்பு
பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கோபி அனன், சமீபத்தில், சிரியா சென்று
அதிபருடன் இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், முடிவு எதுவும்
எட்டப்படவில்லை.
இந்நிலையில், நியூயார்க்கில் செயல்பட்டு வரும் மனித உரிமைக் கண்காணிப்பு
அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி
ஓடிவிடாதபடி தடுக்கும் வகையில், துருக்கி, லெபனான் எல்லைப் பகுதிகளில்,
சிரியா கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளதாக, ஆதாரங்களுடன் குற்றம்
சாட்டியுள்ளது. எனினும், கண்ணிவெடிகளின் அளவு, எண்ணிக்கை எவ்வளவு என்பது
தெரியவில்லை.
ஐ.நா.,வில் கடும் வாக்குவாதம் : நியூயார்க்கின் ஐ.நா., பாதுகாப்பு
கவுன்சிலில், நேற்று முன்தினம், சிரியா குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம்
நடந்தது. இதில், சிரியாவின் தற்போதைய மோசமான நிலைக்கு யார் காரணம் என்பது
குறித்து, அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை
சாட்டி, விவாதத்தில் ஈடுபட்டன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பேசுகையில், “நாடுகளின்
இறையாண்மையையும், எல்லை முழுமையையும் அமெரிக்கா மதிக்கிறது. அதே நேரம்,
நாடுகள் தங்கள் சொந்த மக்களைக் கொன்று குவிக்கும் போது, இதே
வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, கவுன்சில் கையைக் கட்டிக் கொண்டு இருக்க
வேண்டும் என்பதை ஏற்க முடியாது’ என்றார்.
இதையடுத்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் பேசுகையில்,
“சிரியாவின் தற்போதைய நிலைமைக்கு, அரசு, எதிர்த் தரப்பு வீரர்கள்,
அல்-குவைதா உள்ளிட்ட பயங்கரவாதிகள் என, அனைவருமே பொறுப்பு என்பதை, ரஷ்யா
ஒப்புக் கொள்கிறது’ என்றார்.