அமெரிக்கா உள்நாட்டு விடயத்தில் மூக்கை நுழைக்க ஒரு போதும் இடமளியோம்; ரிசாட் பதியுதீன்

news
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையானது தமிழர்களுக்குத் தனிநாட்டைக் கொடுப்பதைப் போன்றும், சிங்களவர்களைப் பழிவாங்குவதைப் போன்ற ஒரு பாரிய மாயையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,அமெரிக்காவின் இப் பிரேரணையானது எமது இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கிலேயே அமைகின்றது.

இப் பிரேரணையானது தமிழர்களுக்கு ஆதரவானதென்றும், சிங்களவர்களுக்கு எதிரானதென்றும் மக்கள் மத்தியில் பாரிய மாயைத் தோற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இவை வெறும் மாயைத் தோற்றங்களே.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மகிந்த அரசு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறானதொரு மாயைகள் மூலம் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் அனைவரும் இந்த மாயைகளை பொருட்படுத்தாது இனவேறுபாடுகளை மறந்து இலங்கையர்கள் என்ற நிலையில் ஒன்றுபட வேண்டும்.
எமது நாட்டினுடைய உள்விவகாரத்தில் வெளிநாடொன்று  மூக்கை நுழைக்க இடமளிக்க முடியாது என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். இதன்மூலம் இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, எகிப்து உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா பலவந்தமாக மூக்கை நுழைத்து ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துள்ளது.  அதுபோலவே தற்பொழுது இலங்கையிலும் அத்துமீறி உள்நுழைய முயற்சிக்கிறது. இதற்கு நாம் ஒருபோது அனுமதி வழங்கக் கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை குற்றங்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் அனைத்துமே உலக நாடுகளின் கைகளில் உண்டு. இருப்பினும் அதனை இல்லை என பல்வேறு காரணங்களைக் காட்டி மழுப்பி வருகின்றது இலங்கை அரசு.

மகிந்த அரசின் ஆட்சிக் காலங்களில் இருக்கும் அரசாங்க அரசியல் தலைவர்கள் அனைவருமே முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைத்த கதையிலேயே உள்ளனர். இவர்களுடைய இச் செயற்பாடுகள்  அனைத்தும் குற்றவாளிக் கூண்டுக்கு லயாக்கானவர்களை காப்பாற்றுவதாகவே அமைகின்றது.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now