இலங்கையில் வளாகங்களை நிறுவுமாறு பிரித்தானிய உயர்கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கோரியுள்ளளார்.
கொழும்பில் 19 ஆவது வருடமாக நடைபெறும் பிரித்தானிய கல்விக் கண்காட்சியில்
பங்குபற்றும் பிரித்தானிய உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்தியில்
உரையாற்றும்போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இக்கோரிக்கையை விடுத்தார்.
பிரித்தானிய கல்விக்கு இலங்கையில் அதிகரித்துவரும் கேள்விகளை
ஈடுசெய்வதற்காக இக்கோரிக்கையை விடுப்பதாக அவர் தெரிவித்தார். 'பிராந்திய
கல்வி மையமொன்றாக விளங்கவேண்டுமென்ற எமது நோக்கை கவனத்திற்கொண்டு இங்கு
வளாகங்களை அமைப்பது குறித்து நீங்கள் கருத்திற்கொள்வீர்கள் என நம்புகிறேன்'
என அமைச்சர் கூறினார்.
பிரித்தானிய கவுன்ஸிலின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சி இலங்கையில்
நடைபெறும் இத்தகைய மிகப்பெரிய கல்விக்கண்காட்சியாகும். இக்கண்காட்சியில்
இலங்கையிலும் பிரிட்டனிலுமுள்ள பரந்தளவிலான கல்வி வாய்ப்புகள் குறித்து
மாணவர்களும் பெற்றோர்களும் விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை லண்டனில் நடைபெறவுள்ள கொயிங் குளோபல்' எனும் மாநாட்டிற்காக
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, மூன்று துணைவேந்தர்கள் உட்பட
உயர்மட்ட தூதுக்குழுவொன்று நாளை பிரிட்டனுக்கு செல்லவுள்ளது.