அவுஸ்திரேலியாவில்
நடைபெற்ற முக்கோணத் தொடரில் சோபித்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களான குமார்
சங்கக்கார, தினேஷ் சத்திமால் மற்றும் டி. எம். டில்ஷான் ஆகியோர் சர்வதேச
கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி) தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
கொமன்வெல்த் முக்கோண தொடருக்கு பின்னரான ஐ. சி. சி. ஒருநாள் தரவரிசை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை முன்னணி துடுப்பாட்ட வீரர் குமார்
சங்கக்கார 5 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கான
ஒருநாள் தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்த சங்கக்கார தற்போது 4 ஆவது
இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சங்கக்கார கொமன்வெல்த் முக்கோண தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றோர்
வரிசையில் 420 ஓட்டங்களை குவித்து 4 ஆவது இடத்தை பிடித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த தொடரில் அதிக ஓட்டங்களாக 513 ஓட்டங்களை
குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற டில்ஷானும் தரவரிசையில்
முன்னேறியுள்ளார். தர வரிசையில் 4 இடங்கள் முன்னேறிய டில்ஷான் 10 ஆவது
இடத்தை பிடித்தார்.
இளம் வீரர் சந்திமால் கொமன்வெல்த் முக்கோண தொடரில் மொத்தமாக 419
ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அவர் ஒருநாள் தர வரிசையில் முதல் முறையாக 20
வீரர்களுக்குள் இடம்பிடித்தார். அதிரடியாக 18 இடங்கள் முன்னேறி சந்திமால்
தற்போது 18 ஆவது இடத்தில் உள்ளார்.
இதில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவும் தரவரிசையில்
முன்னேறியுள்ளார். கொமன்வெல்த் தொடரில் மொத்தம் 406 ஓட்டங்களை பெற்ற மஹேல
ஜயவர்தன தரவரிசையில் 19 ஆவது இடத்தில் இருந்து 17 ஆவது இடத்திற்கு
முன்னேறினார்.
இந்நிலையில் நேற்று பங்களாதேஷில் ஆரம்பமான ஆசிய கிண்ண தொடரில் மேற்படி
இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கும் பட்சத்தில் தரவரிசையில் மேலும்
முன்னேற வாய்ப்பு உள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ. சி. சி. ஒருநாள் தரவரிசையில்
தென்னாபிரிக்க வீரர்களான ஹாஷிம் அம்லா மற்றும் ஏ.பி. டிவிலியர்ஸ் முறையே
முதல் இரு இடங்களில் நீடிப்பதோடு விராட் கொஹ்லி மூன்றாவது இடத்தில்
காணப்படுகிறார்.
எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்
ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் கடந்த 20
ஆண்டுகளில் மோசமான தர நிலையை பதிவு செய்துகொண்டுள்ளார். 38 வயதான சச்சின்
தரவரிசையில் தற்போது 29 ஆவது இடத்தில் காணப்படுகிறார். கடந்த 1991 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் சச்சின் தரவரிசையில் 31 ஆவது இடத்திற்கு சரிந்தார்.
அதன் பின்னர் அவர் பதிவு செய்துகொண்ட மோசனமான தரநிலை இதுவாகும்.
சச்சின் அதிகபட்சமான ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்கான தர வரிசையில்
முதலிடத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக
தரவரிசையில் முதலிடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சச்சின் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்ய பல மாதங்களாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.சி.சி. ஒருநாள் அணிக்கான 175, 000 டொலர் பரிசுத் தொகை
மற்றும் அதற்கான கேடயத்தை வெல்லும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்
கொண்டுள்ளது. ஒருநாள் தரவரிசையில் 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள
அவுஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம்
மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி, மேற்கிந்திய அணியுடனான 5 ஒரு நாள்
போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தால் தான் அது இரண்டாவது இடத்திற்கும்
சரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒரு நாள் தரவரிசையின் இரண்டாவது இடத்திற்கு தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி 118 புள்ளிகளோடு
இருப்பதோடு இந்தியா 117 புள்ளிகளுடன் காணப்படுகிறது. எனவே ஒரு
புள்ளிகுறைவாக இருக்கும் இந்தியா ஆசிய கிண்ணத்தில் சோபித்தால்
தென்னாபிரிக்க அணியை பின் தள்ள முடியும்.