நோ போல்களை வீச அச்சுறுத்தப்பட்டேன்: மொஹமட் ஆமிர்

 
ஸ்பொட் ஃபிக்சிங் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக சிறுவர் நன்னடத்தைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு விடுதலையாகியுள்ள பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், தான் நோ போல் பந்துகளை வீச அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலுள்ள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே மொஹமட் ஆமிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது ஆரம்பகால வாழ்க்கை, தனது ஊர் போன்றன பற்றி ஆரம்பத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளித்த மொஹமட் ஆமிர், அதன் பின்னர் முக்கிய பகுதியான ஸ்பொட் ஃபிக்சிங் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

"பாகிஸ்தான் அணி சார்பாக விளையாடுவது பற்றிப் பெருமையாக இருந்தது. பாகிஸ்தான் சீருடையில் எனது பெயர் இருப்பதைப் பார்ப்பதைப் பார்க்க என்னால் பொறுமையுடன் இருக்க முடியவில்லை. முதன்முதலாக சல்மான் பட்டை சந்தித்த போது அவர் மிகுந்த நல்லவராகவும், நன்கு படித்தவராகவும் தென்பட்டார். அவர் என்னுடன் நட்புறவுடன் பழகினார். அதேபோல் மஷார் மஜீத்தை முதலில் சந்தித்த போது அவர் மிகவும் உண்மையானவர் போல் தென்பட்டார். அவர் குடும்பத்தைக் கவனிக்கும் மனிதர் போல் தெரிந்தார். அவரது மனைவி மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்" என மொஹமட் ஆமிர் - ஸ்பொட் ஃபிக்சிங் சம்பந்தமான ஆரம்பக் கட்டங்களை விபரித்தார்.

"ஆரம்பத்தில் சல்மான் பட் - ஸ்பொட் ஃபிக்சிங் பற்றிக் கதைத்தபோது அவர் நகைச்சுவைக்காகக் கதைக்கிறார் என நினைத்தேன். இரண்டாவது தடவையாகக் கதைக்கும் போது ஸ்பொட் ஃபிக்சிங் தடை செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவித்தேன். அலி என்னிடம் என்னுடைய வங்கி விபரங்களைக் கேட்டார். நான் கொடுத்தேன். எனினும் அலி எனக்கு எந்தவிதமான பணத்தையும் அனுப்பியிருக்கவில்லை" என மொஹமட் ஆமிர் தொடர்ந்தார். இதில் அலி என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சூதாட்டக்காரரின் பெயர் முதன்முதலாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் பாகிஸ்தானைச் சேர்ந்த இனந்தெரியாத சூதாட்டக்காரர் எனவே விளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்த ஆமிர் "ஓவரில் நோ போல்கள் வீசப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக எனக்கும் தெரியாது. அப்போட்டியில் நான் போட்டியின் நாயகனாக தெரிவானேன். நான் என்னால் இயன்றளவு அப்போட்டியில் சிறப்பாக விளையாடினேன்" எனத் தெரிவித்தார்.

லோர்ட்ஸ் போட்டியில் நடந்தவை பற்றி விபரிக்கும் போது "லோர்ட்ஸ் போட்டிக்கு முன்னதாக மஷார் மஜீத் என்னை அழைத்து நான் அகப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். அலியும் நானும் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளும், அழைப்புக்களும் சர்வதேச கிரிக்கெட் சபையால் கைப்பற்றப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையிலிருந்து என்னை மீட்க வேண்டுமானால் லோர்ட்ஸ் போட்டியில் என்னை இரண்டு நோ போல்களை வீசச் சொன்னார். அலி விவகாரத்தை வைத்து நான் அச்சுறுத்தப்பட்டேன். எனக்கு மஜீத் உதவி செய்கிறார் என நினைத்து நான் நோ போல்களை வீசத் தீர்மானித்தேன். நான் பயந்தேன். நான் பிழை செய்வதாக உணர்ந்தேன். அப்போட்டியில் மொஹமட் ஆசிப் உம் நோ போல்களை வீசுவார் என்பது எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்தார்.

"நான் நோ போல்களை வீசிய பின்னர் மஷார் மஜீத் எனக்கு 1500 ஸ்ரேர்லிங் பௌண்ட்ஸ்களை ஓர் உறையில் வைத்துத் தந்தார். நான் நோ போல்களை வீசியதால் அவர் மகிழ்வாக இருந்தார். நான் அப்பணத்தைப் பார்க்கக்கூட இல்லை. நோ போல்கள் தொடர்பான பணம் எங்கே சூதாட்டம்/ பந்தயத்தோடு தொடர்புபட்டது என்பதை நான் அறிவேன். இரண்டாவது நோ போல் வீச முன்னர் நான் பயந்தேன். எனினும் அவர்கள் எனக்கு உதவுவதாக நான் எண்ணிக் கொண்டேன்" என ஆமிர் தெரிவித்தார்.

"எப்போதுமே அலிக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்திகள் காரணமாக நான் அகப்பட்டுக் கொள்வேன் என்று கருதினேனே தவிர, இந்த நோ போல்கள் காரணமாக அகப்படுவேன் என எண்ணவில்லை. நான் இரண்டாவது நோ போலை வீசிய பின்னர் வெட்கமாக உணர்ந்தேன். நான் என்ன செய்கிறேன் என வக்கார் யூனிஸ் (அப்போதைய பயிற்றுவிப்பாளர்) கேட்டார். தான் தான் நோ போல்களை வீசச் சொன்னதாக சல்மான் பட் அவரிடம் தெரிவித்தார். நான் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்குமாறு அலிக்குக் குறுஞ்செய்தியொன்று அனுப்பினேன். இல்லாவிடில் நான் அகப்பட்டுக் கொள்வேன் என நான் தெரிவித்தேன்" என ஆமிர் தொடர்ந்தார்.

"அந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் மோசமான நாளான அமைந்தது. நியூஸ் ஒஃவ் த வேர்ள்ட் அந்த செய்தியைப் பிரசுரித்த பின்னரே நான் வீசிய நோ போல்களுக்காக நான் அகப்பட்டுக் கொண்டேன் என்பதை உணர்ந்தேன். லோர்ட்ஸில் எனக்காக விருதை (தொடர் நாயகன் விருது - பாகிஸ்தான் சார்பாக) வாங்கவதற்கு விரும்பவில்லை. அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்று எவ்வாறு இருந்தேன், இன்று இவ்வாறு மாறி விட்டதே என நினைத்தேன்" என ஆமிர் அப்போட்டி பற்றிய தனது எண்ணங்களை வெளியிட்டார்.

"நான் சூழ்ச்சிக்குள் உள்வாங்கப்பட்டேன். நான் நோ போல்களை பணத்திற்காக வீசியிருக்கவில்லை. அலியுடனான குறுஞ்செய்திகளுக்காக நான் அகப்படுவேன் எனவே எண்ணினேன். சல்மான் பட் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை அவர் பிழையான முறையில் பயன்படுத்திக் கொண்டார். இச்சம்பவங்கள் தொடர்பாக நான் சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையிட்டிருக்க வேண்டும். நான் முட்டாள்தனமாக இருந்துவிட்டேன். யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என முடிவெடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு தைரியம் இருக்கவில்லை" என ஆமிர் தெரிவித்தார்.

நேர்காணலின் இறுதிக்கட்டத்தில் "இடம்பெற்ற உண்மைகளைத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை என்னிடம் இரண்டு முறைகள் கேட்டது. நான் பயந்தேன். எனது வீட்டாருக்குக் கூட உண்மைகள் எவையும் தெரியாது. என் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டது என் வாழ்வில் மிக மோசமான தருணம். நான் அதன்போது அழுதேன். நான் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவன். எனக்கு நடந்தது இன்னொருவருக்கும் நடக்கலாம். பாகிஸ்தான் அணி பொதுவாக பிழையான அணி கிடையாது. எப்போதும் என் சக வீரர்கள் என்னை சிறப்பாக விளையாடவே ஊக்குவித்தார்கள். அனைத்துக் கிரிக்கெட் ரசிகர்களிடமும், பாகிஸ்தான் ரசிகர்கள் மாத்திரமன்றி அனைவரிடமும், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என ஆமிர் தெரிவித்து நேர்காணலை நிறைவு செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஐந்து வருடகால போட்டித்தடையை அனுபவித்துவரும் மொஹமட் ஆமிர், சிறுவர் நன்னடத்தைப் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் வழங்கிய முதலாவது பகிரங்கப் பேட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேரகாணலை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் நேர்முக வர்ணனையாளருமான மைக் ஆதர்ட்டன் தொகுத்து வழங்கினார். (க்ரிஷ்)
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now