தெண்டுல்கர்
சதம் அடித்தால் இந்திய அணி வெற்றி பெறாது என்ற கருத்து பரவலாக
பேசப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு அவர் தனது 100-வது சதத்தை அடித்து உலக
சாதனை படைத்த போது இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால் தெண்டுல்கர் சதம்
அடித்து இந்தியா அதிகமான போட்டிகளில் வெற்றியே பெற்று இருக்கிறது என்று
புள்ளி விவரம் சொல்கிறது.
5 அடி 5 அங்குலம் கொண்ட தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் மாதம்
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தனது 23 ஆண்டு கால கிரிக்கெட்
பயணத்தில் நேற்று 100-வது சதத்தை அடித்து முத்திரை பதித்தார்.
188 டெஸ்டில் 51 சதமும், 462 ஒருநாள் போட்டிகளில் 49 சதமும்
அடித்துள்ளார். இந்த 100 சதத்தில் இந்திய அணி 53 போட்டிகளில் வெற்றி
பெற்றுள்ளது. ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர் 49 சதம் அடித்து உள்ளார்.
இதில் 33 சதத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் அவர் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றதை ரசிகர்கள் யாரும்
மறந்து இருக்க மாட்டார்கள். அவரது 14 சதம் வீண் ஆனது. ஒரு சதம் டையில்
முடிந்தது. ஒரு சதத்தில் முடிவு இல்லை.
டெஸ்டில் 51 செஞ்சூரி அடித்துள்ளார். இதில் 20 சதம் வெற்றியை பெற்று
கொடுத்து இருக்கிறது. இதில் வெளிநாட்டு மைதானங்களில் 9 வெற்றி அடங்கும். 11
சதத்தால் தோல்வி ஏற்பட்டது. 20 சதம் “டிரா” ஆனது.
சர்வதேச போட்டியில் 100-வது சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த
தெண்டுல்கரை யாரும் தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் உள்ளார்.
ரிக்கிபாண்டிங் 71 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
தெண்டுல்கரை தொட அவருக்கு இன்னும் 29 சதங்கள் வேண்டும். தெண்டுல்கரின்
100-வது சதம் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். 20 ஆண்டுகளுக்கு மேல்
விளையாடினால் மட்டுமே அது முடியும்.
தெண்டுல்கர் அந்த அளவுக்கு உடல் தகுதியுடன் இருந்து தனது 38-வது
வயதிலும் சதம் அடித்து இளைஞர் போல் திகழ்கிறார். பல்வேறு சாதனைகளுக்கு
சொந்தக்காரரான சச்சின் தற்போதை கிரிக்கெட் உலகின் சகாப்தம் ஆவார்.