காலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 340 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று பிற்பகல், 264 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் ஜொனதன் ட்ரொட் 112 ஓட்டங்களை பெற்றார். ஆனால் வேறு எவரும் அரைச்சதத்தையும் பெறவில்லை. மத்தியூ பிரையோர் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. எனினும் பின்வரிசை வீரர்கள் ஐவர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுராஜ் ரந்தீவ் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் மொத்தமாக 12 ரங்கன ஹேரத் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
2010 ஓகஸ்ட் மாதம் காலியில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது. அது முத்தையா முரளிதரனின் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது. அதன்பின் சொந்த மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் வென்றமை இதுவே முதல் தடவையாகும்.
இத்தொடரின் இரண்டாவது போட்டி ஏப்ரல் 3 ஆம் திகதி பி. சரவணமுத்து அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
தற்போதுடெஸ்ட் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் பாகிஸ்தானுடனான 3 போட்டிகளில் அவ்வணி தோல்வியைத் தழுவியது.