
Time சஞ்சிகையின் 2012 ம் வருடத்திற்கான உலகின் 100 செல்வாக்கான நபர்களை தெரிவு செய்யும் பொதுமக்கள் வாக்கெடுப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இது பெரும்பாலானோரிடையே வரவேற்பை பெற்றுள்ள போதும், மறுபுறம் மிகுந்த சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அரசின் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து பொது மக்களுக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி, தமக்காக வாக்களிக்கும் படி மோடி கோரிக்கை விடுத்து வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சுமத்தியுள்ளார்.
'மோடியை போன்று உலகில் எவரும் இப்படி மோசடி செய்ய முடியாது. பொதுவிழாக்களில் எப்படி பாஜகவுக்காக நிதி வசூலிக்கிறார்களொ அதை பார்த்தே இம்மாநில காவற்துறையினருக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை மோடி அரசு வழங்கிவருகிறது. அதே போன்று இப்போது இணையத்தளத்திலும் வாக்குவேட்டையில் இறங்கியுள்ளார்' என அர்ஜுன் மோத்வாடியா மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2011ம் வருடம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இவ்வாறு டைம்ஸ் பட்டியலில் மோசடி மூலம் முன்னிலை பெற்றார் என விமர்சனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை (ஏப்ரல் 6) திகதியுடன் இப்பட்டியலுக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவடைகிறது. ஏப்ரல் 17ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இன்றைய (ஏப்ரல் 5) ம் திகதி நிலைமைப்படி, நரேந்திர மோடிக்கு ஆதரவாக 194159 வாக்குகளும், எதிராக 74457 வாக்குகளும் கிடைத்துள்ளன. இத்தரவுகளின் படி உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பிரபல இணையத்தளமான Reddit இன் நிறுவனர் எரிக் மார்டின் இரண்டாவது இடத்திலும், பிரபல திரைப்பட இயக்குனர் ஆஷ்கர் ஃபார்ஹாடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 2012ம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக ஆஸ்கார் விருதினை வென்ற 'A Separation' எனும் ஈரானிய திரைப்படத்தை ஆஷ்கர் பார்காடி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மக்களின் விருப்ப தேர்வுகளின் படி உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை வித்யா பாலன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.


