கூடங்குளத்தை தகர்க்க 3 வினாடிகள் போதுமாம்: இலங்கை எம்பி ஒருவர் திடீர் தகவல்

தொடர் பிரச்சனைகளை சந்தித்து வரும் கூடங்குளம் அணு உலைக்கு தற்போது சீனாவால் பெரும் ஆபத்து ஒன்று இருப்பதாக இலங்கை எம்.பி ஒருவர் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் தென்னிந்திய அணு உலைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் இதுதொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் இலங்கை தெரிவித்து வந்தது. இந்நிலையில் இலங்கையின் எம்.பி. ஒருவர் தற்போது திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் உள்ள காற்றாலை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சீனர்கள் இந்தியாவின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக திடுக்கிடும் தகவலை கூறினார்.

மேலும் சீனாவால் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு கூடங்குளத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இலங்கையிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து விளைவிக்க வெறும் 3 வினாடிகளே போதும் என்றும் கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கையின் எந்த எம்பி தெரிவித்திருப்பார் என நாம் ஆராய்ந்து பார்த்தபோதும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்டதாக தெரியவந்துள்ளாது.

"இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை´ என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில் புதன்கிழமை (11/04/2012) அவர் பேசியதாவது:

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலிச் சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்வது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் தர, மூன்றாம் தரக் குடிமக்களாக தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்தன. அதற்கான அடையாளங்களையே அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது.

திரிகோணமலை பகுதியில் 22 சதவீதமாக இருந்த சிங்களவர், முஸ்லிம்களின் மக்கள்தொகை தற்போது 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்பாறை பகுதியில் 21 சதவீதமாக இருந்த சிங்களவர் மக்கள்தொகை தற்போது 90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மீண்டும் தமிழர்கள் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது. சிங்கள இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல், இன அழிப்பு உலகுக்கு தெரியவந்துவிடும் என்பதால், அப் பகுதியில் குடியேற்றத்தை தடுத்து வருகிறது.

ஜெனீவா தீர்மானம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம், சம உரிமை கிடைக்கும் என்றால், அது தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தின் காரணமாகவே வழங்கப்படும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் ஓங்கி ஒலித்ததன் காரணமாகவே, ஜெனீவா தீர்மானத்துக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு கொள்கைரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜெனீவா தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச சமூகத்தின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. இருந்தபோதும், தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவது, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு, கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பொது விசாரணை என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்குத்தான் குறிப்பாக தமிழகத்துக்கு ஆபத்தாக இருக்கும். யாழ்ப்பாணம் அருகே மாகல் என்ற இடத்தில் சீனா காற்றாலை அமைத்து வருகிறது. ஆனால், அங்கிருந்து 3 விநாடிகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தாக்க முடியும் என்கின்றனர். இவ் விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கை வரும் இந்திய எம்.பி.க்கள் குழு, சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து சுதந்திரமாக தமிழர் பகுதிகளைப் பார்வையிட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உண்மை நிலை தெரியவரும் என்றார். கூடங்குளத்தை தகர்க்க 3 வினாடிகள் போதும்! சீனாவால் ஆபத்து! - இலங்கை எம்பி தகவல்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now