காலியில் தமிழ் குடும்பங்கள் மீது கொடூரத் தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம்

காலியில் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம் - முழு விபரம் இணைப்புகாலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அத தெரண தமிழிணையம் பெற்றுக் கொண்ட நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு,

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார்.

எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது.

கடந்த 11ம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவ சிப்பாய் (றுவான் குமார என்பது பெயர் என தெரியவருகிறது) திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை ´சேர்´ என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், எதிர்வரும் புதுவருடத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என குறித்த இராணுவ சிப்பாய் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர் சொன்னபடியே நேற்று (14ம் திகதி) காலை 10 மணியளவில் திலிதுற தோட்டத்துக்கு வந்த இராணுவ சிப்பாய் தன்னை ´சேர்´ என அழைக்க மறுத்த இளைஞனை அவருடைய வீட்டுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்த தமிழ் இளைஞன் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஏன் அடிக்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.

இதன்போது குறித்த இடத்திற்கு திடீரென வந்த 25 - 30 சிங்கள இளைஞர்கள் இவ்விருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த 7 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்து தங்க நகை, பணம் மற்றும் வாகன உரிமம், தொலைக்காட்சி என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 90 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து எல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸாரும் அங்கு வந்துள்ளனர். பொலிஸார் வந்து நின்றதை கண்டும் சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நிலைமையை சமாதானம் செய்யவே அதிக முயற்சி செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததோடு மேலும் சில தமிழ் இளைஞர்களை பெயர் குறிப்பிட்டு தேடி வந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்தகுமார் மற்றும் சந்திரகுமார் என்ற இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் சுமார் 520 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 3400 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வித் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லையே தவிர இந்த மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து நல்ல செல்வம் உடையவர்களாக கௌரவ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து இணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை மக்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் பிளவை வலுபெறச் செய்யுமே தவிர ஒற்றுமையை ஏற்படுத்த ஒருநாளும் வழி ஏற்படுத்தாது என சமூக ஆர்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now