இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் அவர் இன்று அளித்த பேட்டியில்:
"இலங்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியக் குழு செல்கிறது. இந்த குழு இலங்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்து விட்டது. இந்த நிலையில் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்கள் அச்சமில்லாமலும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்யப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதில் மத்திய அரசு மெளனமாக உள்ளது.
அரசு இதன்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது அரசை மக்கள் மாற்ற வேண்டும்.
பாகிஸ்தான், சீனாவில் இலங்கை பயங்கரவாத பயிற்சி எடுத்து வருகிறது. இதில் இந்திய அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு இல.கணேசன் தனது பேட்டியில் தெரிவித்தார்.


